செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்,
செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப்பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் (வழி), அரியலூர் மாவட்டம் – 612901, விலை 150ரூ.
சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாற்றைப் பண்பாட்டை புலவர்களும் அறிஞர்களும் பலவிதங்களில் ஆய்ந்து எடுத்துரைத்துள்ளனர். அவ்வரிசையில் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதியிருக்கும் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் என்ற நூலும் ஒன்றாக இருக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக கரிகால்ச்சோழனின் வரலாற்றையும் கலிங்கத்தில் இருந்து காரவேலன் படையெடுப்பையும் விளக்கும் அவர் கரிகாலனின் வீரத்தைப் புகழும் பாடல்களையும் எடுத்து அடுக்கிறார். கரிகால்வளவனும் திருமாவளவனும் ஒன்றே என்று பட்டினப்பாலை பற்றிய இன்னொரு கட்டுரையில் சொல்கிறார். மலைபடுகடாமின் நன்னன், பற்றிச் சொல்லும் அவர் அவன் ஆண்டபூமி இப்போதைய செங்கம் என்ற இடம் என்கிற அவர் அங்குள்ள இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு நன்னன் ஆண்ட மலைப் பகுதிக்கும் பயணம் செய்து சங்ககாலச் செய்திகளை வியக்கின்றார். இன்று அம்மலை பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. திருக்குறள், சிலப்பதிகாரம், கபிலர் உயிர் துறந்த இடம், தொல்காப்பியம், குறுந்தொகை என்று இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் புதையல்தான். நன்றி: அந்திமழை, 30/9/2013.
—-
ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும், வே. கலியமூர்த்தி, சுடரொளிப் பதிப்பகம், 99/அ3, பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை 106, விலை 150ரூ.
வேளாண்மைப் பொருளாதாரத்தின் ஆய்வுக்கூறுகள் அனைத்தும் ஊரகப் பொருளியலில் அடங்கியுள்ளன. அதிலேயே ஊரக சுகாதாரம், மின்வசதி, குடியிருப்பு, சாலை வசதி, தகவல் தொடர்பு போன்றவைகளும் அடங்கியுள்ளன. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்மானிக்க முக்கிய பங்கு வகிப்பது, ஊரக மற்றும் வேளாண்மை பொருளாதாரமே. பொருளாதாரத்தை பற்றி ஆய்வு செய்த ஒரு முழுமையான நூலாக உள்ளது. இது கல்லூரி பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிக்க பயன் தரும். நன்றி: தினத்தந்தி 13/3/2013