விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்
விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 481, விலை 100ரூ.
சுவாமி விவேகானந்தர் தம்மையும் தமது வாழ்க்கை நிகழ்வுகளையும் பற்றி எழுதியுள்ள மிக அரிதான நூல் இது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக விவேகானந்தர் ஆனதும், தன் குருவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி அவர் விவரிப்பதும் ஒரு ஆன்மிக நாவல்போல் விரிகிறது. சிகாகோ சர்வதேச மகாசபையில் அவர் ஆற்றிய உரையும் அவர் இந்தியாவிற்குத் திரும்பி வர வேண்டிய அவசியமும் படிக்கும்போது நம் உடலில் ஒரு புது உணர்வு எழுகிறது. இந்து மதம் பற்றியும், மற்ற மதங்கள் பற்றியும் விவேகானந்தர் கொண்ட கருத்துக்களைப் பற்றி அவரே நமக்கு நேராகச் சொல்வதுபோல் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பாராட்டத்தக்கது. விவேகானந்தர் கடவுள் மீதும் மனிதர்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை அளவிடற்கரியது. அதில் பிறரைக் காப்பாற்றுவதற்காக நரகத்திற்குச் செல்வதும் நல்லதே என்பதை அவர் நம்புவதாகக் கூறுவது நம்மையும் நம்ம வைக்கிறது. நன்றி: குமுதம், 24/4/2013
—-
தமிழ்க் கல்வெட்டுகளில் அறிவியல் கோட்பாடுகள், முனைவர் கா. அரங்கசாமி, மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் 608001, பக். 288, விலை 125ரூ.
தமிழனுக்கு சாதியில்லை, மதம் இல்லை, சடங்குகள் இல்லை என்ற அடிப்படையில், திருவள்ளுவரை ஆதார உணர்வாகக் கொண்டு, பல்வேறு தமிழ்க் கல்வெட்டுகளை ஆய்வு செய்து இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது. பிராமணர்களுக்கு சலுகை இருந்தபோதும், தண்டனை பெற்றார். விஜயநகர மன்னர் ஆட்சிக்காலத்தில், ஊரவை என்னும் குடியரசுகள் அழிவைக் கண்டன என்பதும் இந்த நூலில் காணப்படும் தகவல்கள். தமிழகத்தில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் இருக்கலாம் என்றும் அதில் 5000 மட்டும் அச்சாகியுள்ளன என, பதிவு செய்கிறார். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் வாழ்ந்த அறிவியல் கோட்பாடுகளை பிரதிபலிக்கும், இவைகளில் ஆசிரியர் குறிப்பிடும் சில தகவல்கள் சுவையானவை. கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள், தாய்போல நின்று அப்பணியாளர்களை காத்தன(பக்கம் 99) கிருட்டிண தேவராயர் காலத்தில் அடிமைச்சாசனம் எழுதித்தரும் ஓலைகள் இருந்தன. பஞ்சபாதிப்பு காரணமாக அடிமைகளாக பெரும்பாலும் கோவில் பணிகளில் மட்டுமே ஈடுபட்டதாக காட்டுகிறது. தனிநபர்களுக்கு அடிமையாக அதிகம் செயல்படவில்லை போன்ற தகவல்கள் உள்ளன. முகமதியர் படையெடுப்பும், அதனால் ஏற்பட்ட அழிவு குறித்த கல்வெட்டு தகவல்கள் புதிய செய்திகளாக தெரிகின்றன. (பக். 235). பின்னிணைப்பில் பல கல்வெட்டுகளின் படிகளும் உள்ளன. கல்வெட்டு ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் படிக்க வேண்டிய நூல். -பாண்டியன். நன்றி: தினமலர், 15/9/2013