சங்கே முழங்கு
சங்கே முழங்கு, மு.கோபி சரபோஜி, அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜெகந்நாதன் நகர் தொடர்ச்சி, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 35ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-663-1.html
மாதா, பிதாவிற்கு அடுத்து குரு என்ற உயர்நிலையில் வைத்து நம் சமூகம் ஆசிரியரைப் போற்றுகிறது. அந்த ஆசிரியர் நல்லாசிரியராக, சிறந்த ஆசிரியராக மாணவன் விரும்பும் ஆசிரியராக திகழ்வதற்கும் ஆசிரியர் – மாணவனின் கூட்டு வெற்றிக்கும் ஆலோசனைகளை வழங்குகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 18/12/13.
—-
ஆழ்வார் நால்வர், பெரு. தியாகராசன், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 104, விலை 40ரூ.
சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் சிறப்பித்துக் கூறப்படும் நால்வர் உண்டு. இதுபோல் வைணவ ஆழ்வார் பன்னிருவரில், பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகிய நால்வருக்கு மங்களா சாசனம் செய்திருக்கிறார் நூலாசிரியர். இந்த 4 ஆர்வார்களின் காலம், குலம், பெயர்க்காரணம், படைப்புகள் அவற்றின் சிறப்புகள், ஆழ்வார் தம் பெருமைகள் என வைப்புமுறை சிறப்பாக உள்ளது. பகவானுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வார், பிள்ளைத்தமிழ் முதல்வர் என்பதையும், கண்ணன் பாட்டில் பாரதிக்கே வழிகாட்டி என்பதையும் அழகுற எடுத்துரைக்கிறார். பெரியாழ்வாரின் வேயர் குலும் குறித்து கொடுத்துள்ள விளக்கம் அருமை. வைணவத்தைப் பெற்றெடுத்த நற்றாய் நம்மாழ்வார் என்பதை இரண்டாவது கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். வைணவத்தை வளர்த்தவராக இருந்தபோதிலும் சமய சமரச ஞானியாகவும் நம்மாழ்வார் விளக்குவதை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழின் தனிச்சிறப்பான காதல் தோய்ந்த அகத்துறையிலும் ஆழங்கால்பட்டது என்பதை விண்டுரைத்திருப்பது சிறப்பு. ஆண்டவனின் பெருமையை அகத்துறையின் ஊடாகச் சொல்வதில் திருமங்கையாழ்வாரும் பெரும் புலமை வாய்ந்தவர் என்பதை அடுத்த கட்டுரையில் நிரூபித்திருக்கிறார். சமயக் குரவர் மாணிக்கவாசகரைப் போன்று, பெருமாள் மீது ஊனையும் உயிரையும் உருக்கவல்ல பாடல்களைப் பாடியவர் சேரமன்னர் குலசேகர ஆழ்வார் என்பதை நான்காவது கட்டுரை விரிவாகக் கூறுகிறது. விளக்கமாக நூலைப் படைத்திருக்கும் நூலாசிரியர், ஆழ்வார் பாசுரங்களின் மூலத்தை மட்டும் கொடுத்துவிட்டு விளக்கம், தராமல் விட்டது ஏனோ? நன்றி: தினமணி, 9/12/13.