உபரி வடைகளின் நகரம்
உபரி வடைகளின் நகரம், லிபி ஆரண்யா, சந்தியா பதிப்பகம், (சிறந்த கவிதைத் தொகுப்பு).
அரசியலும் அழகியலும் கவிதையில் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளாத இணைகோடுகள் என்ற விமர்சனத்தை வீறுகொண்டு உடைக்கிறது லிபி ஆரண்யாவின் கவிதைகள். விஞ்ஞானத்தால் நிலத்தின் மீது நிகழும் வன்முறையை, குழந்தைகளின் திறமைகளைக் கொன்றுவிட்டு அவர்களை மனப்பாட பொம்மைகளாக்கும் கல்விமுறையை, நமது தேசிய வியாதியாகிவிட்ட நீரிழிவு நோய்க்கும் அந்நிய மோகத்துக்கும் குறிப்பாக, அமெரிக்க மோகத்துக்கும் இடையிலான அரசியலை, அகவிலைப்படி உயர்வுக்கும் மதுரை வடக்கு மாசி வீதி டாஸ்மாக் வாசிலில் ஒருவன் எடுக்கும் வாந்திக்கும் இடையிலான காரணங்களையும் உரத்துப் பேசுகின்றன லிபியின் வரிகள்.
—-
மாகடிகாரம், விழியன், பாரதி புத்தகாலயம்.(சிறந்த சிறுவர் இலக்கியம்).
நாம் எல்லோரும் கடிகாரம் பயன்படுத்துகிறோம். காலம் காட்டும் அந்தக் கருவிக்கு காலத்தைக் காட்டுவது எது? அதுதான் மாகடிகாரம் என்கிறார் ஹெர்குலிஸ் தாத்தா. யாவரும் அறிந்திராத ஒரு ரகசிய இடத்தில் இயங்கிவரும் அந்தக் கடிகாரத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாவி கொடுத்துப் பராமரிக்க வேண்டும். இல்லை என்றால், உலகமே ஸ்தம்பித்துவிடும். அடுத்த ஐந்து ஆண்டுகள் அதைப் பராமரிக்கும் பொறுப்பு தீமன் என்கிற சிறுவனுக்கு வழங்கப்படுகிறது. சிறுவன் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தானா? எதிர்பார்க்காத திருப்பத்துடன் கதையை முடிக்கிறார் ஆசிரியர். சிறுவர்களை அமானுஷ்யமான உலகுக்கு அழைத்துச் சென்று அறிவியல் உலகத்தை அறிமுகம் செய்யும் சாதுர்யமும் சுவாரஸ்யமும் விழியன் எழுத்துகளின் பலம். நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.