திராவிடத் தெய்வம் கண்ணகி

திராவிடத் தெய்வம் கண்ணகி, தொகுப்பாசிரியர் சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 926, விலை 700ரூ.

ஒற்றைச் சிலம்பு கொண்டு மன்னனிடம் நீதி கேட்டு வாதாடி, மதுரையைப் பற்றி எரியச் செய்தாள் கண்ணகி. அவளது சிலம்பாலும், சினத்தாலும் உருவான சிலப்பதிகாரம் திராவிட இதிகாசமாகப் போற்றப்படுகிறது. கண்ணகி திராவிடத் தெய்வமாக வணங்கப்படுகிறாள். வீரபத்தினி, நடுகல், தாய்த் தெய்வம் போன்ற முன்னோர் வழிபாடுகள் திராவிட வழிபாடுகளாக விளங்கி வருகின்றன. கண்ணகி வழிபாடு திராவிட மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒன்றாகவும், ஆரம்பகாலம் தொட்டே வளர்ந்து வந்த கிராமிய வழிபாட்டு முறைகளிலே சிறப்பிடம் பெறுவதாகவும் உள்ளது. மாரி, காளி, கண்ணாத்தாள் போன்று பல்வேறு பெயர்களில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அம்மன் வழிபாடும் கேரளத்தில் உள்ள ஆற்றுக்கால், கொடுங்கலூர், பாலக்காட்டில் பகவதி வழிபாடும் நடைபெறுகிறது. இலங்கையில் தமிழர்களால் கண்ணகியாகவும், சிங்களர்களால் பத்தினித் தெய்வமாகவும் அம்மன் வழிபாடு நடைபெறுகிறது. மாநிலம், நாடு கடந்து வழிபடப்படும் இந்த அம்மன்கள் அனைவருமே கண்ணகியின் அம்சமாகத் திகழ்வதாக ஆய்வு, இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுபுறப் பாடல்கள் மூலம் நிரூபிக்கிறார் நூலாசிரியர். கண்ணகி தொடர்பாக வியக்கத்தக்க செய்திகளை உள்ளடக்கிய இந்த நூல் அளவில் பெரியது மட்டுமல்ல, அரியதும்கூட. பல பகுதிகளில் பாடப்படும் கண்ணகி குறித்த பாடல்களும் கண்ணகை அம்மன் காவியங்களும் கோவலன் கண்ணகி நாடகப் பகுதிகளும் நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இது கண்ணகி குறித்து மேலும் ஆய்வு செய்ய ஆர்வமுள்ளோருக்கு பெரிதும் உதவும். நன்றி: தினமணி, 5/11/2012.  

—-

 

அவ்வையர் பாடல்களின் கருத்துக்கள், தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம், 1/519, வடக்குத் தெரு, நாட்கோ காலனி, கொட்டிவாக்கம், சென்னை 41, விலை 100ரூ.

அவ்வையாரின் நல்வழி, மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் ஆகிய தொகுப்புகளில் உள்ள பாடல்களுக்கத் தெளிவுரை எழுதியுள்ளார். யோ.கில்பட். எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அவ்வையார் பயன்படுத்தியுள்ள உவமைகளையும், தத்துவச் சிந்தனைகளையும், செய்யுளின் நுணுக்கங்களையும் திறம்பட எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அவ்வையாரின் பாடல்களை அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. நன்றி: தினத்தந்தி, 8/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *