நாகூர் நாயகம் அற்புத வரலாறு

நாகூர் நாயகம் அற்புத வரலாறு, நாகூர் ரூமி, வள்ளல் அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, விலை 140ரூ.

இந்த விநாடி, அடுத்த விநாடி போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமீயின் இன்னொரு படைப்பு நாகூர் நாயகம் அற்புத வரலாறு. நாகூர்பதியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தவராஜ செம்மேரு என்று குணங்குடியார் போற்றி மகிழ்ந்த நாகூர் ஆண்டவர், மீரான் சாகிபு வலியுல்லாஹ், ஷாகுர்ஹமீது பாதுஷா, எஜமான் ஆண்டவர் என்றெல்லாம் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் புகழ்ந்து ஏற்றப்படுகின்ற இறைநேசகர் அப்துல் காதிர் அவ்லியாவின் வரலாற்றுத் தொகுப்பு நூல் இது. இந்நூலில் சூபியிஸத்தின் மாண்பு, மனிதப் பிறவியின் நோக்கம், ஒருமை என்றால் என்ன என்பது பற்றியும், ஒரு சற்குருவின் அவசியம், சிறப்பு இவை பற்றியும், அழகாகச் சொல்லியுள்ளார். அல்லாஹ் இல்லாத இடமும் பொருளும் இல்லை. அவனை அறிந்துகொள்வதை விட அடைந்து கொள்ளவே விரும்புகிறேன். அந்த நிலை ஒருவருக்குக் கிடைக்கவில்லையெனில் அவருடைய வாழ்நாள் வீண்தானே என்று எஜமான் ஆண்டவர் தன் தந்தையிடம் கூறும் ஓர் இடம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மனிதப் பிறவியின் நோக்கம் இதுதான். இந்த மையப்புள்ளியை விட்டுவிலகினால் எந்த வணக்கமும் வழிபாடும் செயலும் வீணே. இறை நேசர்களுக்கு ஜாதி மத வித்தியாசம் கிடையாது. மனிதாபிமானமும், அன்பும் கருணையுமே அவர்களுடைய இயல்பு என்பதை இந்நூலின் பக்கங்கள் வலியுறுத்துகின்றன. நூலைப் படித்து முடித்தவுடன், சற்குருவாக, குத்பாக மக்கள் போற்றும் ஓர் மெஞ்ஞானி இறைநிலையோடு தன்னை இணைத்துக்கொண்டு இறைநேசராக உயர எவ்வளவு தூரம் ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டார்கள் என்று அறிந்து பரவசம் ஏற்படுகிறது. -அஹ்மத் இஸ்மாயில், நன்றி: தி இந்து, 18/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *