உங்களின் முன் மாதிரி யார்?
உங்களின் முன் மாதிரி யார்?, பேரா. கு. நல்லதம்பி, விஜயா பதிப்பகம், கோவை.
ஆசிரியர் பணி ஓர் அறம் என்ற நமக்குப் பரிச்சயமான தத்துவத்தை ஒரு புதிய கோணத்தில் புதிய வடிவத்தில் இந்த நூல் விவரிக்கிறது. அதே நேரத்தில் ஆசிரியரின் இலக்காகிய நன் மாணாக்கரையும் இணைத்துப் பேசுகிறது இந்த நூல். இருவரின் பரிணாம வளர்ச்சி பூரணத்துவம் பெறுவது எப்படி, எப்போது என்பதை ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். ஓர் அநை நூற்றாண்டுக்கும் முந்தைய கல்விக்கூடச் சூழலில், தமக்குக் கிடைத்த அனுபவங்களின் சாறு பிழிந்து, தம் ஆசிரியர்கள், மாணக்கர்களின் சாயலில், கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து, கதையாக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். களம் கற்பனை, கள மாந்தர் கற்பனை. ஆனால் நிஜத்தின் நெருக்கம் நம் நெஞ்சைக் கவர்கிறது. இளங்குழவிப் பள்ளி முதல் ஆய்வுப்பட்டம் வரையிலான கால் நூற்றாண்டுக் கல்விக் காலத்தில் மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்படும் உறவு எத்தகைய சாதனை சரித்திரம் படைக்கவல்லது என்பதை நூல் சுட்டிக்காட்டுகிறது. -விஜய திருவேங்கடம். நன்றி: தினமலர்,14/9/2014.
—-
சோதனைகளை வென்று சாதனை படைத்த அருணா, கே.ஜி. சங்கரநாராயணன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 90ரூ.
சோகம் மறைத்துக் கலகலப்பூட்டும் ஓர் இளம் பெண்ணை நம் கண் முன்நிறுத்தி, அவளைப்போல் பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்று இந்த நாவல் மூலம் நூலாசிரியர் வலியுறுத்தியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.