சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
சேரன்மாதேவி, குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும், பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், விலை 275ரூ.
தமிழ்நாட்டு அரசியலை அப்படியே புரட்டிப் போடக் காரணமான ஊர் சேரன்மாதேவி. அந்த ஊரில் இருந்து செயல்பட்டு வந்த குருகுலத்தில் குறிப்பிட்ட நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருக்குமானால், தமிழகத்தின் கடந்த முக்கால் நூற்றாண்டு வரலாற்றை கணிப்பதே சிரமமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரியார் வெளியேறாமல்கூட இருந்திருக்கலாம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளே உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பற்றிய நுணுக்கமான அனைத்துத் தகவல்களையும் தாங்கியதாக இந்தப் புத்தகத்தை எழுதி உள்ளார் பழ. அதியமான். வரலாற்றின் வெளிச்சம்படாத பக்கங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் தோண்டி எடுத்து எழுதக்கூடிய ஆய்வாளர்களில் பழ. அதியமான் குறிப்பிடத்தக்கவர். வ.ரா.ஜார்ஜ் ஜோசப், வரதராஜுலு பற்றிய ஆய்புகளை மேற்கொண்டவர். அன் தொடர்ச்சியே இந்தப் புத்தகம். சேரன்மாதேவியில் பாரத்வாஜ குருகுல ஆசிரமத்தை வ,வே.சு. அய்யர் தொடங்கினார். ஆரம்பத்தில் கல்லிடைக்குறிச்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் ஊர் மாறியது. காங்கிரஸ் ஆதரவாளர்களது நிதி உதவியால் உருவாகிய அந்த ஆசிரமத்துக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பண உதவி அளித்து வந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் (1923) 10 ஆயிரம் ரூபாய் நிதி அளித்துள்ளார். முதலில் ரூ.5 ஆயிரத்தை கொடுத்துவிட்டார். மீதிப் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னதாகவே விவகாரம் முற்றிவிட்டது. இந்த ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சாதிப் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக 1924ல் விவகாரம் வெடித்தது. வ.வே.சு. அய்யர் இதில் தீவிரமாக இருந்தாரா, மகாதேவ அய்யர் தீவிரமாக இருந்தாரா என்பது இதுவரை விவாதத்துக்கு உரியதாக இருந்தது. ஆனால் குமரன் இதழில் வெளியான சான்றுடன் பழ. அதியமான் அதனைத் தெளிவுபடுத்திவிட்டார். ஒரு தனிமனிதனுக்குச் சாதாரணமாக ஜாதியின் அமைப்பை மாற்ற அதிகாரம் கிடையாது என்று சொல்லியிருக்கிறார் வ.வே.சு. அய்யர். தாழ்வாகக் கருதப்பட்டவர்களுக்கு சடங்கு ஒன்றைச் செய்து உயர்வானவர்களுக்குச் சமமானவர்களாக மாற்றிவிடலாம் என்று வ.வே.ச. அய்யர் ஆலோசனை சொன்னார். அனைவருடனும் கலந்து உண்ண சில குழந்தைகள் மறுத்தால், அவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று காந்தி சொன்ன விசித்திரமான ஆலோசனையையும் ஆதாரங்களுடன் கொடுக்கிறார் அதியமான். இதன் பிறகுதான் தமிழக அரசியலில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்ற சொற்பிரயோகமே பிறந்தது. நடந்தபோது மிகச்சிறு நிகழ்வு. ஆனால் அதன் விளைவு மிகப்பெரியது. அதுபற்றிய முழுமையான வரலாறு இதுவரை வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ள புத்தக பொக்கிஷமாக அமைந்துவிட்டது. -புத்தகன். நன்றி: ஜுனியர்விகடன், 10/12/2014.