மானா
மானா (இமயத்தின் மகள்), ராதா பட், தமிழில் கே.என். சாருமதி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 216, விலை 200ரூ.
ராதா பட், தன் 16 வயதிலேயே கவுசானியிலுள்ள லட்சுமி ஆசிரமத்தில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக உத்தரகண்ட் மலைப் பகுதியில் வாழும் பெண்களுக்கு கல்விப்பயிற்சி கொடுத்துள்ளார். 1957ல் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் ஐக்கியமானார். உத்தரகண்ட் பகுதியில் மதுவிலக்கு இயக்கம் நடத்தி பெரும்பாலும் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். ‘சிப்கோ’ இயக்கத்தில் ஈடுபட்டு வனப் பாதுகாப்பு, வனப்பொருட்களை நீடித்துப் பயன்படுத்தும் முறைகள் பற்றி பெண்களுக்கு கல்வி புகட்டினார். இந்த நூல், ராதா பட்டின் குழந்தை மற்றும் பள்ளிப் பருவத்தை விளக்கும் சுயசரிதை. இந்நூல், இமயமலையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள, குமாஊன் பகுதி கிராம மக்களின் தினசரி வாழ்க்கை, விவசாய பணிகள், கலாசாரம் மற்றும் உறவுகள் பற்றிய, மிகவும் அருமையான தகவல்களைத் தருகிறது. சாருமதி. இந்த நூலை வெகு சிறப்பாகத் தமிழாக்கித் தந்திருக்கிறார். சுகமான வாசிப்பு அனுபவம். -எஸ்.குரு. நன்றி: தினமலர், 8/2/2015.
—-
அருட்செல்வன் நேரர்காணல்கள், இராமானந்த அடிகளார் அறக்கட்டளை, பக். 208, விலை 175ரூ.
அருட்செல்வர் நா. மகாலிங்கம், அரராகிவிட்டாலும், இந்த நுல் நம்முடன் அருகமர்ந்து உரையாடும் உணர்வை தோற்றுவிக்கிறது. சுபமங்களா, வாசுகி பத்திரிகைகளில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான அவரது நேர்காணல்களையும், சென்னை வானொலி நிலைய ‘நிலாமுற்றம்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று உரையாடியதையும், அருட்செல்வரின் ‘அனுபவவெளி பாகம் 1, பாகம் 2’ என, அவருடன் உரையாடித் தொகுக்கப்பெற்ற செய்திகளையும் ஒன்று சேர்த்து, ‘ஓம் சக்தி’ மாத இதழின் ஆசிரியர் பெ.சிதம்பரநாதன், இந்த நூலாக உருவாக்கி உள்ளார். மிகச்சிறந்த தொழிலதிபராகவும், தேசிய தெய்வீக உணர்வுடையவராகவும், சிந்தனை வளம்மிக்க தமிழ்ச் சான்றோராகவும் திகழ்ந்த அருட்செல்வரின் அருங்குணச் சிறப்புகளையும், வாழ்க்கைச் சரிதத்தையும், வரலாற்று பதிவாக்கியுள்ள நூல் இது எனலாம். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 8/2/2015.