ஜீவாவின் சமுதாயத் தொண்டு
ஜீவாவின் சமுதாயத் தொண்டு, த. காமாட்சி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ப. ஜீவானந்தம். ஏழை, பாட்டாளி மக்களின் தலைவர் அவர். சிறந்த இலக்கியவாதி, பத்திரிகையாளர், பெண்ணடிமையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சாதிமுறையைச் சாடியவர். சிறந்த காந்தியவாதி. பொதுவுடைமைவாதி. தொழிலாளர்களின் உண்மைத்தலைவர். த. காமாட்சியின் ஆய்வு நிறைஞர் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், சமுதாய சீர்த்திருத்தத்தில் ஜீவா ஆற்றிய தொண்டு, விடுதலைப் போராட்டத்தில் அவரின் பங்கு, கம்யூனிச கோட்பாட்டில் அவரது உறுதிப்பாடு ஆகிய கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஜீவாவைப் பற்றிய எந்த நிகழ்வையும் விட்டுவிடாமல் ஆய்வு செய்யப்பட்ட இந்நூல், அடுத்த தலைமுறைக்கு ஜீவாவை எடுத்துச் செல்கிறது. நன்றி: குமுதம், 14/9/2015.
—-
முனியமரம், பாலா, புதிய தரிசனம், சென்னை, பக். 80, விலை 80ரூ.
வாழ்வின் யதார்த்தங்களைப் பேசும் கவிதைகள். தன் அனுபவங்களை, தான் கண்ட சமூகக் கொடுமைகளை சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ள பாலா கவிதை நடையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் எதிலும் வீரியம் குறைவுபடாமல். முனியமரம் கவிதை வழி போலித்தனமான சமூக மூட நம்பிக்கையை அடியோடு சாய்க்கும் அசுரக் காற்றாய் தன் கவிதை வரிகளை வீசச் செய்கிறார். அம்மாவின் வாசனைக்கு மனசும் ஏங்குகிறது. விளிம்பு நிலை மக்களின் அவல வாழ்வு அவரை பாதித்ததைவிட, படிப்போரை பாதிக்க வைக்கும் காட்சியாக்கித் தருகிறார். இன்னும் நிறைய நிறைய விஷயங்களை நம் முன் கொண்டுவந்து வெளிச்சம் படச் செய்கிறார். இவை வெறும் கவிதைகள் அல்ல. விதைகள். அதற்கு மணிவர்மாவின் ஓவியங்கள் நீரூட்டுகின்றன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 14/9/2015.