பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்
பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 895, விலை 950ரூ.
நூலாசிரியர் பொறியாளர். அதனால், கணிதவியல் முறை சார்ந்த ஆய்வு மரபை முன்னெடுத்து, சங்கப் பிரதிகளை ஆய்வு செய்துள்ளார். இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு மலைக்கச் செய்கிறது என முன்னுரையில் பேராசிரியர் வீ. அரசு கூறுகிறார்.
சிவராஜப் பிள்ளை, கமில் சுவலபில் ஆகியோரை அடுத்து, தனக்கென தனி முறையியலை உருவாக்கிக் கொண்டு, அதன் அடிப்படையில், தமிழக வரலாற்றை கணியன் பாலன் ஆய்ந்துள்ளதாக, வீ. அரசு தெரிவிக்கிறார். நூலாசிரியர், சங்க இலக்கியத்தை கூர்ந்து கற்றதன் அடிப்படையிலும், பிற நாட்டு வரலாறுகளை ஆய்ந்து பயின்றதன் அடிப்படையிலும், சில கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடை தேடல் முயற்சியாக இந்நூலை உருவாக்கியுள்ளார்.
அந்த கேள்விகளில், சங்க இலக்கியத்தை கி.மு. 3 முதல், கி.பி. 2ம் நூற்றாண்டு வரை என, ஏற்றுக் கொண்ட அறிஞர்கள், அந்த இலக்கியம் குறிப்பிடும் அனைத்து வேந்தர்களின் காலத்தையும் கி.பி.க்கு பிந்தைய காலம் என சொல்வது ஏன்? தமிழரசுகள், மவுரியப் படையை முறியடித்தது குறித்து, இந்திய தமிழக வரலாறுகள் மவுனம் சாதிப்பது ஏன்?
‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருண்ணமூர்த்தி வெளியிட்ட சான்றுகளின்படியும், பிறர் வெளியிட்ட சான்றுகளின் படியும், தமிழக மன்னர்கள், கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தே ஆட்சி செய்து வருகின்றனர் என்பதை நிரூபித்தாலும், அனைத்து வேந்தர்களும் கி.பி.க்கு பிந்தையவர்கள் என்பது ஏன்? ஆகிய கேள்விகள் குறிப்பிடத்தக்கவை. தவிர்க்கப்பட முடியாத வரலாற்று நூல் இது.
நன்றி: தினமலர், 9/6/2016.