எப்படி கதை எழுதுவது?

எப்படி கதை எழுதுவது?, பயிற்சிப் புத்தகம்-ரா.கி. ரங்கராஜன், குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை 115ரூ.

கதையினால் உலகத்தை வெல்லலாம். மனிதனைத் திருத்துவது, வழிகாட்டுவது, மேம்படுத்துவது, சிரிக்க வைப்பது, தியாகம் செய்ய வைப்பது, குடும்பத்துக்கும் தேசத்திற்கும் பணியாற்ற வைப்பது எல்லாமே கதைகள்தான். அந்தக் கதைகளை எழுதுவது எப்படி என்பதைத்தான் பயிற்சியின் மூலம் மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் நமக்கு இந்நூலில் சொல்லித் தருகிறார். இவை முன்பு அஞ்சல்வழிக் கல்விபோல் தனித்தனியாக கற்பிக்கப்பட்டாலும், இன்று அவை ஒருசேர, ஒரே நூலாக தரும்போது, அதன் பயன் கூடுதலாகப்படுகிறது. ஒருவர் கதை எழுத விரும்பினால், இந்நூலை ஒருமுறை படித்தால் போதும். அதற்குத் தேவையான அத்தனைப் பயிற்சிகளும் இதில் உண்டு. புதிதாக கதை எழுதுபவர்களுக்குத் தனிப் பயிற்சி. ஏற்கெனவே பத்திரிகைகளில் கதை எழுதி, ஓரளவு எழுதத் தெரிந்தவர்களுக்கு வேறு வகைப் பயிற்சி என்று தந்துள்ளார். கதையின் ஆரம்பப் புள்ளியில் தொடங்கி, அதன் பாத்திரங்கள், உரையாடல்கள், சம்பவங்கள், புதிர்கள், கிளைக்கதைகள், எதிர்பாராத திருப்பங்கள், முடிவு என்று அத்தனை நிலைகளிலும் உங்களுக்குப் பயிற்சி அளிக்கும் நூல். குமுதம் பு(து)த்தகம் இதை வெளியிட்டு நீங்களும் எழுத்தாளராக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. நன்றி: குமுதம், 29/1/2014.  

—-

 

மாண்புமிகு மனிதர்கள், வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், ஜே.6, லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 88, விலை 80ரூ.

மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து வரலாறாக மாறிய மாமனிதர்களின் கதைதான் மாண்புமிகு மனிதர்கள். பெஞ்சமின் பிராங்க்ளின், சிந்தனை சிற்பி, சிங்காரவேலர், எழுத்தாளர் லக்ஷ்மி, ஓளவை டி.கே. சண்முகம், மகான் சங்கராச்சாரியார், கவியரசு கண்ணதாசன், கல்பனா சாவ்லா உள்ளிட்ட மனித குலத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த 12 பேரின் வாழ்வை கதைகளாக்கி சிறுவர்களை உயர்ந்தோராய் மாற்றும் பணி இது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 15/1/2014.

Leave a Reply

Your email address will not be published.