திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ.

ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் முறுகி வளர்ந்து பெருகி நிற்கும் பேரன்பே காமம் என்பதாகும். பின்னாளில் காமம் என்ற சொல் தன் பெருமைப் பொருளை இழந்து சிறுமைப்பட்டதாகக் கருதப்பட்டமையால், இன்பத்துப்பால் என்னும் பெயர்கொண்டதாம். திருக்குறளில் காமம் என்னும் சொல், 39 இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இன்பம் என்னும் சொல், இரண்டு இடங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவ்விரண்டு இடங்களில் காமம் என்னும் சொல்லும் வருகின்றது என்ற, முதுமனைவர் இரா. இளங்குமரனாரின் மேற்கோள், குறிப்பிடத்தக்கது. (பக். 6). தாய்பபாலின் சிறப்பு, இன்றைய வாழ்வியலுக்கு வள்ளுவரின் வழிகாட்டல், காமத்துப்பால் அமைப்புமுறை போன்ற அரிய செய்திகளும் நூலுக்குச் சிறப்பூட்டுகின்றன. ஆய்வாளர்கள், தமிழ் அன்பர்கள் படித்து மகிழ, அறியத்தக்க நல்ல நூல். நன்றி: தினமலர், 21/6/2015.  

—-

பிளேட்டோவின் குடியரசு, சாகித்ய அகாதெமி, சென்னை, விலை 230ரூ.

அமர வாழ்வு பெற்ற தத்துவஞானி பிளேட்டோ, 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய இந்த நூல் மனித குலத்திற்கு அறிவு வழங்கும் கருவூலமாய் இன்னும் திகழ்கிறது. இதன் மையக் கருத்துக்கள் மங்காது ஒளி தருகின்ற வகையில் அமையப்பெற்றுள்ளன. வினாக்களைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே விடை காணுதல் என்னும் சாக்ரடீஸ் முறையில் ஆராய்கிறார் பிளேட்டோ. தனி மனிதனுக்கான நீதி, சமுதாயநெறி ஆகியவற்றை ஆராய்கிறபோது கல்வி, அரசு, குழந்தைகள், பெண்டிர், சமுதாயம், அழகு, சத்தியம், நல்ல தன்மை மற்றும் இவற்றோடு இணைந்த பல கருத்துக்களையும் விமர்சிக்கிறார் பிளேட்டோ. மனித குலத்தின் சிந்தனை பரவிவரும் வரலாற்றுப் பாதையில் மூன்று புதிய கருத்துக்கள் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை மக்கள் சமுதாயப் பொது முன்னேற்றத்துடன் தனி மனிதனுடைய முன்னேற்றமும் இணைந்து செயல்படும் தத்துவம், வாழு வாழவிடு என்ற குறிக்கோள், வேறு எப்பயனையும் கருதாது, அறத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதல் ஆகியனவாகும். ஆர். இராமானுஜாசாரி எளிய தமிழில் மொழியாக்கம் செய்திருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *