முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்
முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள், ரா. கிருஷ்ணன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ.
முருகப் பெருமானின், தொண்டர்களை பற்றி விவரிக்கும் நூல். அகத்தியர், நக்கீரர் துவங்கி, திருமுருக கிருபானந்த வாரியர் வரை, 37 முருக தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பரவசத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. சக்தி விகடன் இதழில் இந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்த போதே, ஆன்மிக அன்பர்களின் பாராட்டைப் பெற்றது. இப்போது, புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது. இறைவனை தன் உள்ளக் கமலத்துக்குள் அடக்கி வைத்திருக்கும், அவரது தொண்டர்களின் பெருமைதான் பெரியது என்ற அவ்வையாரின் வாக்குடன் இப்புத்தகம் துவங்குகிறது. ஒவியர், பத்மவாசன், முருகப்பெருமானை அற்புதமாக வரைந்துள்ளார். சேந்தனாரின் இல்லம் தேடிச்சென்று,இறைவன் களி உண்ட கதை; நிரோஷ்டகம் என்றால் என்ன; பார்வையற்ற வீரராகவர் உள்ளிட்ட எண்ணற்ற முருகனின் தொண்டர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்களை அழகாக விவரித்துள்ளார், இந்நூலின் ஆசிரியர். -சரண்யா சுரேஷ். நன்றி: தினமலர், 23/11/2014.
—-
தமிழ் மொழி இலக்கிய வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை, விலை 120ரூ.
தமிழ் மொழியின் வரலாற்றையும், தமிழ் இலக்கிய வரலாற்றையும் நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் எழுதியுள்ளார் பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். சங்க காலத்து இலக்கியங்கள் பற்றி அரிய தகவல்களை அறிய முடிகிறது. நீண்டஇடை வெளிக்குப் பின், புதிய வடிவமைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி. 12/11/2014.