விடியலை நோக்கி
விடியலை நோக்கி, க. ராகிலா, வாசகன் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ.
ராகிலாவின் எழுத்து, லட்சிய எழுத்து. ஒவ்வொரு கதையும், ஒரு நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் இந்தச் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். 18 சிறுகதைகள், இந்தத் தொகுதியில் இருக்கின்றன. எல்லாமே, மணி மணியான கதைகள். முதியோர் இல்லங்களில், பெற்றோரை தவிக்க விடாதீர்கள் என்று சொல்லும் முதல் கதையான, உறவுகள் பிரிவதற்கல்ல கதை அருமை. பல சிறுகதைகளில், அருமையான குணச்சித்திர வார்ப்புகள். குட்டச்சிக் கிழவி என்ற கதையில் வரும் குட்டச்சிக் கிழவி, மகப்பேறு வைத்தியம் பார்க்கும் மருத்துவச்சி. உங்கள் குழந்தைகளை, பள்ளியில் படிக்க வைக்கிறேன் என சத்தியம் செய்தால்தான், பிள்ளைப் பேறு பார்ப்பேன் என சொல்கிறாள் அந்த மூதாட்டி. பரிசளிக்க உகந்த புத்தகம். -எஸ். குரு. நன்றி: தினமலர், 21/9/2014.
—-
மறைந்த தமிழகத் தலைவர்கள், முக்தா வீ. சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 50ரூ.
சிறந்த நூல் என்பது, புத்தகத்தின் கட்டமைப்பில் இல்லை. அதன் கருத்தில் உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த நூல் வெளிவந்துள்ளது. தமிழகத் தலைவர்களில், மூதறிஞர் ராஜாஜி முதல், கம்யூ. தலைவர் பி. ராமமூர்த்தி வரையிலான 10 தலைவர்களின் வரலாற்று சம்பவங்களை, இந்த நூல் முன்வைக்கிறது. 1939ல் பூண்டி குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தவர் சென்னை மேயராக இருந்த தீரர் சத்தியமூர்த்தி. காந்தியின் விமர்சனத்தால், மனம் உடைந்த காமராஜர், தமிழ்நாடு காங். தேர்தல் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்தார். முத்துராமலிங்கத் தேவர், தாழ்த்தப்பட்ட இளைஞரை, தன் வீட்டிலேயே தங்க வைத்து படிக்க வைத்தார். மூப்பனாருக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு என, தலைவர்கள் வாழ்வின் பல சம்பவங்களை(சில அவர் நேரடியாக கண்டவை) தொகுத்திருக்கிறார். தமிழகம் மறக்க கூடாத தலைவர்களை நமக்கு நினைவூட்டி இருக்கிறார். -சி.சுரேஷ். நன்றி: தினமலர், 21/9/2014.