அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும், பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 225ரூ.

சித்தர்கள் தங்கள் கடும் தவத்தின் மூலம் முக்காலங்களையும் அறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், தங்கள் பாடல்களின் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவக் குறிப்புகளை விபரம் அறிந்தவர்கள் மட்டுமே புரியக்கூடிய பரிபாஷைகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள் என்றும், இவர்களைப் பற்றி பலவாறு கூறப்படுவதுண்டு. சித்தர்கள் என்றாலே திருமூலர் முதல் கோரக்கர் வரையிலான பிரசித்தி பெற்ற 18 சித்தர்களைப் பற்றித்தான் பெரும்பாலும் பேசப்படுவதுண்டு. ஆனால் இந்நூலில் ஆதி காலத்திய அகத்தியர் முதல் சமீப காலத்திய காஞ்சி மகா பெரியவர் மற்றும் கிருபானந்த வாரியார் வரையிலான அனைத்து சித்தர்களைப் (60பேர்) பற்றிய விபரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. சித்தர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கை வரலாறும், சித்தி அடைய அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், அதன் மூலமாக அவர்கள் பெற்ற சக்திகளும், அதிக் கொண்டு அவர்கள் புரிந்த அற்புதங்களும், தனித்தனியாக சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதில் இராமதேவர் என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள சித்தரைப் பற்றிய குறிப்புகள் மிகவும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன் பிராமண குலத்தில் தோன்றிய இராமதேவர், பிறகு தேவர் குலத்திற்கு மாறி, புலத்தியரை குருவாக ஏற்று, ஞானம் பெற்று, தனது தியாக சக்தி மூலம் அரபு நாடான மக்கா சென்று, இஸ்லாத்தை ஏற்று, யாகூப் என்று பெயர் மாற்றம் பெற்று, அங்கு சில காலம் வாழ்ந்து அரேபிய மொழியையும், அங்குள்ள வைத்திய முறைகளையும் கற்றுத் தேர்ந்து, மீண்டும் தியான முறையில் தமிழகம் வந்து, அழகர் மலையில் சமாதி அடைந்தது வரை அக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு சித்தரைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது நன்றி: துக்ளக், 11/9/2013.  

—-

 

வரலாற்றில் அவ்வை, ஜே.ஆர். இலட்சுமி, மதன்மோனிகா பதிப்பகம், ஏ 27, ஏ, கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை 82, விலை 150ரூ.

உலகில் தோன்றிய பெண் புலவர்களுள் தலைசிறந்தவராக விளங்கி, சோழர் காலமாகிய இடைகாலத்தில் வாழ்ந்து, நீதிநூல்கள் பல பாடிய அவ்வையார் குறித்து பல கதைகள் உண்டு. அவ்வையாரின் வாழ்வியல் பரிமாணங்கள் மற்றும் அவருடைய கல்வெட்டு செய்திகளை சான்றாதாரங்களுடன் கள ஆய்வு செய்து தகவல்களை தொகுத்து பதிவு செய்துள்ளார் ஆசிரியர். இந்நூல் சங்க இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கம், பெண்மையை போற்றுபவர்களும் பயனுடையதாக அமையும். நன்றி; தினத்தந்தி, 11/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *