அவரது நினைவுகள்
அவரது நினைவுகள், தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில் யூமா. வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 125, விலை 100ரூ.
தகழி 1985ல் ஞானபீட விருது பெற்றவர். செம்மீன், ரண்டிடங்கழி, தோட்டியின் மகன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளவர் தகழி. பெரும்பாலான நாவல்கள் மனித வாழ்வின் தீவிரத் துன்பங்களிலிருந்து உருப்பெற்றவை. அந்த வரிசையில் ஓர் இருட்டுலக நிலவெளியை முற்றாகப் பெயர்த்து நம் மன மையத்தில் வைத்து வெளிச்சம் கொடுக்க வைத்த பெரு முயற்சிதான் அவனது நினைவுகள் நாவல். எச்சில் தொட்டிகளைச் சுற்றி வாழும் நாய்களில் ஒன்றால் வளர்க்கப்பட்டவர்தான் இந்த நாவலின் நாயகன். மனிதனின் இந்த கடைக்கோடி வாழ்வை, அதிலிருந்து அவன் பெற்ற உயிர்ப்பின் அடையாளத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகளோடு கோர்த்திருக்கிறார். விபச்சாரம் பற்றிய வாழ்வுதான் கதைக்களனாக அமைகிறது. நம் கண்ணில் ஊற்றை வரவழைக்கிறது. யூமா. வாசுகியின் மொழி பெயர்ப்பில் ஒரு மூல நாவலைப் படித்த உணர்வு எழுகிறது.
—-
மறைந்து போகும் மூலிகைகளும் மறந்து போன மருந்துகளும், டாக்டர் கே.பி. அருச்சுனன், ஸ்ரீ புற்று மகரிஷி சமூக சேவை மையம், 629, பேஸ்2, சத்துவாச்சாரி, வேலூர், பக். 160, விலை 120ரூ.
நம் முன்னோர்கள் பல மூலிகைகளை ஆராய்ந்து, அப்படியே சொன்னால் மக்கள் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்று பக்தி, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றுடன் இணைத்து சம்பிரதாயங்களாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். அவற்றில் மருத்துவ குணமுள்ள பல மூலிகைகள் இன்று மறைந்துவிட்டன. இன்னும் பல மறைந்து வந்துகொண்டு இருக்கின்றன. அடுத்த நூறு ஆண்டுகளில் அவை முற்றிலும் மறைந்துகூட போய்விடலாம் என்ற கவலை நூலாசிரியருக்கு. அவற்றில் பல மூலிகைகளை – நந்தியாவட்டம் முதல் அரசமரம் வரை பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும், அவற்றால் தீரும் நோய்கள் பற்றியும் விலாவாரியாக ஆசிரியர் தந்துள்ளார். நன்றி: குமுதம், 17/7/2013.