உன் மீதமர்ந்த பறவை
உன் மீதமர்ந்த பறவை, பழனிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ.
யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை, காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை நேர மெல்லிய மழையில் நனைவதற்கு இணையானது. பழனிபாரதியின் இந்த கவிதை தொகுப்பும் அதுபோன்றதே. தொகுப்பு முழுக்க காதல் கவிதைகள் மட்டுமே இருந்தாலும் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த மின்மினிப் பூச்சி, நம்மை அறியாமல் விரல் இடுக்குகளில் இருந்து நழுவுவதைப்போல், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக அபூர்வா, உயிர்த்துளை, உன்னதம், உச்சிப்பூக்கள், இரவு, அதன்பிறகு, உன் நிலத்தை கடந்து போகிறேன், மலர்ச்சூழல் போன்ற கவிதைகள் வாசிக்கும்போதே, மனதில் காட்சிப் படிமங்களாக தங்கி விடுகின்றன. பல்லிடுக்கில் சிக்கிக் கொண்ட மாமிசத் துண்டுபோல் தவித்துக் கிடக்கும் மனதை, ஒரு ஊமைச் சிறுமி, தன் முன்னிரவு கனவை விவரிப்பதுபோல் உள்ளது, பழனிபாரதியின் மொழி நடை. மனதில் உள்ள அரூப காட்சிகளை, கோடுகளில் கொண்டு வந்ததுபோல், ஏ.பி. ஸ்ரீதரனின் ஓவியங்கள் உள்ளன. -அ.ப.ராசா. நன்றி: தினமலர், 3/8/2014.
—-
யோகா, சி. அண்ணாமலை, விகடன் பிரசுரம், பக். 120, விலை 80ரூ.
யோகாவா அதெல்லாம் வயசானவங்களுக்கு மட்டும்தானே தேவை? கல்லையும் தின்னு செரிக்குற வயது இது… கையைக் காலை வளைச்சு, என்னத்தக் காணப் போறோம்ன்னு, இளவட்டங்கள் நினைக்க, அப்படி நினைக்காதீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற, பள்ளிப் பருவத்திலிருந்தே யோகா செய்து வருவது மிக மிக நல்லது என்கிறது இந்நூல். யோகா செய்வதால், உடற்கூற்றியல் ரீதியாக என்னென்ன நன்மைகள் விளைகின்றன என்பதை, மிகத் தெளிவாக, புகைப்படங்களுடனும், வரைபடங்களுடனும் விளக்குகிறது. உடல் ஆரோக்கியம், மன அமைதி, நினைவுத் திறன் அதிகரித்தல், சூழலைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்து முடித்தல் உட்பட, பற்பல நலனை அளிக்கிறது யோகா என்கிறார் ஆசிரியர். சில மாதங்களிலேயே, தோலின் தன்மைகூட, இதமாக மாறிவிடும். நல்ல, அமைதியான தூக்கம், தீர்க்கமான சிந்தனை, தெளிவான நோக்கம் என, நன்மைகளை அடுக்கும் ஆசிரியர், நல்ல மாற்றங்கள் வேண்டுவோர், தொடர் முயற்சி செய்ய வேண்டும் என்கிறார். அக்கறையுடன் வாங்கி, அக்கறையுடன் படித்து, அக்கறையுடன் பயிற்சி செய்தால், இக்கரைதான் பச்சை என்பது அனைவருக்கும் புலப்படும். -சண்பகவல்லி. நன்றி: தினமலர், 3/8/2014.