உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள்
உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள், குன்றில் குமார், அழகுபதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜிநகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-478-9.html
மன்னர் ஆட்சிக்குப் பின் சர்வாதிகார ஆட்சியும், அதற்குப் பின் ஜனநாயக ஆட்சி முறையும் தோன்றியது. இதிலும் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட சிலர் அவ்வப்போது உருவாகி கொடுங்கோல் ஆட்சி புரியும் நிலை ஏற்படுகிறது. பல நாடுகளில் அத்தகைய ஆட்சிக்கு எதிரான கலவரங்கள் உருவாகி, உயிர்ப் பலிகள் ஏற்பட்டு ஆட்சி மாற்றங்களும் நடந்து வருகின்றன. அதே சமயம் சில சர்வாதிகாரிகளால் சில தேசங்களில் ஒழுக்கமும், உயரிய பண்புகளும் காப்பாற்றப்பட்டு முன்னேற்றமும் கண்டுள்ளன. இத்தகையவர்களைப் பற்றி இந்நூல் குறிப்பிடவில்லை. கொடுங்கோல் எண்ணம் கொண்டு, தங்கள் நாட்டை மட்டுமின்றி, பிற நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த முனைந்து, உலகை உலுக்கிய ஈராக்கின் சதாம் உசேன் முதல் லிபியாவின் கடாஃபி உகாண்டாவின் இடி அமீன், ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, ரஷ்யாவின் ஸ்டாலின், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், பிலிப்பைன்ஸின் மார்க்கோஸ் வரை பிரபலமான 19 சர்வாதிகாரிகளைப் பற்றி இந்நூல் விளக்குகிறது. இந்தச் சர்வாதிகாரிகள் எவ்வாறு உருவானார்கள். இவர்கள் ஆட்சியின்போது மக்கள் என்னென்ன கொடுமைகளைச் சந்தித்தார்கள். இவர்களுக்கு எதிராக எப்படி போராட்டங்கள் உருவாகின. இவர்களின் ஆட்சி அதிகாரம் எப்படி பறிக்கப்பட்டது, இவர்களது அந்திமக் காலம் எவ்வாறு அமைந்தது என்பது போன்ற பல சந்தேகங்களுக்கு விடை கூறும் விதமாக இந்நூல் உள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 14/8/13.
—-
பல்லவர் பாண்டியர் அதியர் குடவரைகள், மு. நளினி, இரா. கலைக்கோவன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 778, விலை 300ரூ.
சென்னை அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கோவில்களின் குடவரைகள், கல்வெட்டுகள், கருவறை மண்டபம், சுவர் சிற்பங்கள், அவற்றின் நீளம், அகலம், உயரம், காலம் ஆகிய விவரங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. குடவரைகளில் காணப்படும் சிற்பங்களை விவரிக்கும்போது அவற்றை நேரில் காண்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பெரும்முயற்சியுடன் கூடிய ஆய்வு மூலம் உருவாகியுள்ள இந்த நூலில் பின் இணைப்பாக குடவரை கோவில் சிற்பங்கள் வண்ணப்படங்களாக இடம்பெற்று இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 7/8/13.