ஊமையன் கோட்டை
ஊமையன் கோட்டை, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 168, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-2.html
ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின் சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது. ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனான ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனை சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. சிவகங்கைச் சீமையின் வளம் பற்றியும், மக்களின் நலன் கருதி அந்தப் பகுதியில் நிலவும் அமைதியை கெடுத்துக் கொள்ள விரும்பாத காரணத்தால், ஆங்கிலேயர்களிடத்திலே பெரியமருது பாண்டியருக்கு இருந்த அச்சம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளைக்கார கம்பெனியார்களிடம் நட்பு பாராட்டினாலும், புரட்சி செய்வதில் விருப்பம் உள்ளவராகவே சின்னபாண்டியர் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஊமைத்துரையை சிறை உடைப்பு நடத்தி விடுவிக்கும் முயற்சியில் புரட்சிப் படை இளைஞர்களோடு, சின்னபாண்டியரும் ஈடுபடுகிறார். சிறை உடைப்புக்காக புரட்சிப் படையினர் நிதி திரட்டுவதற்காகப் படும் கஷ்டங்கள் எதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவலின் காட்சிகள், அனைத்தும் கண்முன் நடப்பது போன்ற தோற்றமும் வாசிப்போருக்கு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கட்டும் முயற்சியில் புரட்சி படை இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். பனஞ்சாறு சேர்த்து களிமண்ணால் கோட்டை உருவாக்கி முடிக்கும்போது ஆங்கிலேயப் படை தாக்குதல் நடத்துகிறது. அதில் கோட்டை முழுவதும் தரை மட்டமாக்கப்பட்டு ஊமைத்துறை, வீரத்தேவன் உள்ளிட்டோரும் வீரமரணம் அடைவதாக சித்தரிக்கிறது ஊமையன் கோட்டை. நன்றி: தினமணி, 3/6/2013.
—-
சுவாமிஜியும், நேதாஜியும், சாருகேசி(தமிழில்), ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 130, விலை 25ரூ.
சுவாமி விவேகானந்தரின் 150வது ஜயந்தியை முன்னிட்டு கையடக்கப் பிரதியாக அழகுற வெளியிட்டிருக்கிறது ஸ்ரீராமகிருஷ்ண மடம். நேதாஜியின் தேசபக்திக்கு ஆதாரமாகத் திகழ்ந்த விவேகானந்தரின் கருத்துக்களை இணைத்துத் தந்த விதம் அருமை. நண்பர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பரிசளிக்கலாம். நன்றி: சக்தி விகடன், 19/3/2013.
