ஏன் எங்கே எப்படி?
ஏன் எங்கே எப்படி?, வாண்டுமாமா, கவிதா வெளியீடு, தபால் பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ.
மூளைக்கு வேலை 80-90களில் குழந்தைகளாக இருந்தவர்களைக் கவர்ந்த எழுத்தாளர் வாண்டுமாமா. பொதுஅறிவு சார்ந்து சிந்திக்கத் தூண்டிய அவர், தகவல்களில் துல்லியம், சரியான அயல்மொழி சொல் உச்சரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். ஒரு பொது அறிவுத் தகவலை வெறும் தகவலாக மட்முல்லாமல் அதன் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுவதில் வல்லவர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கவரும் எளிய மொழியில் எழுதியது அவரது சிறப்பம்சம். அவர் அறிமுகப்படுத்திய பகுதிதான் மூளைக்கு வேலை. இதன் கீழ் பொது அறிவுக் கேள்விகள், புதிர்கள், புதிர் கணக்குகள், விடுகதைகள் என பல அம்சங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். இப்படி அவர் எழுதிய அனைத்தும் 300க்கும் மேற்பட்ட பக்கங்களில் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கல்கி, கோகுலம் இதழ்களில் பணியாற்றியபோது அவர் எழுதியவை. பெரும்பாலான புதிர்களுக்குச் சித்திரங்களை வரைந்திருப்பவர் செல்லம். தமிழ் குழந்தைக் கதை உலகில் வாண்டுமாமா செல்லம் ஜோடி புகழ்பெற்றது. எந்தப் படம், எந்த நாடு, இவர்கள் யார், வீடுகள், தொழில்கள், அரங்குகள், ஊரின் அடையாளங்கள், கையெழுத்துகள், சிம்பல்கள், சின்னங்கள், மோட்டார் வாகனங்கள், ரயில்கள், சாலைப் போக்குவரத்து, விமானங்கள், கப்பல்கள், பாலங்கள் போன்ற தலைப்புகளில் தரப்பட்டுள்ள சித்திரப்புதிர்கள் குறிப்பிடத்தக்கவை. நினைவுத் திறனை அதிகரிக்கக்கூடியவை. உலகப் புகழ்பெற்ற கப்பல் கேப்டன்கள், கடலோடிகள், புகழ்பெற்ற பெண்கள், சுழல் கேள்வி பதில் புதிர்கள் புதிய அனுபவத்தைத் தருகின்றன. பொது அறிவுக் களஞ்சியத்துக்கான முழுமையுடன் பல்வேறு துறைகள் தொடர்பான கேள்வி பதில்கள் தலைப்பு வாரியாக இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வரும் கேள்வி பதில் புத்தகங்களுக்கு இணையான நூல் இது. ஒரே வித்தியாசம், இவை அனைத்தையும் புத்தகமாக எழுதாமல், தனித்தனி அத்தியாயங்களாக வாண்டு மாமா எழுதியுள்ளதுதான். நன்றி: தி ஹிந்து, 10/11/13.