கச்சத்தீவு
கச்சத்தீவு,(தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்), ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், பேருந்து நிலையம் பின்புறம், தியாகராயநகர், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html
கச்சத்தீவை சூழ்ந்து நிற்பது தண்ணீர் அல்ல. தமிழனின் கண்ணீர். நாகை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் மீனவர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இடம் மட்டுமல்ல அது. தமிழகத்தின் வளத்தோடு சம்பந்தப்பட்டது. இப்போது இந்தியாவின் மானத்தோடு தொடர்புடையது. கடந்த 40 ஆண்டு காலமாக 600க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கானவர் உடல் ஊனம் ஆக்கியும் மிகபெரிய வன்கொடுமை தொடர்வதால் இது உலக மனித உரிமைப் பிரச்சினையாகவும் மாறிவிட்டது. அத்தகைய கச்சத்தீவு பற்றிய கண்ணீர் வரலாறு இது. பொதுவாக வரலாற்றுப் புத்தகங்கள் விவரங்களின் தொகுப்பாக மட்டும் இருக்கும். சிலர் எழுதுவது உணர்ச்சி பூர்வமாக மட்டும் இருக்கும். தகவல்களைத் தேட வேண்டும். ஆனால் வரலாற்றுக் குறிப்புகளை கோபமான வார்த்தைகள் கொண்டு இந்த புத்தகத்தை ஆர்.முத்துக்குமார் எழுதி இருக்கிறார். ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குத்தான் கச்சத்தீவு சொந்தம் என்பதற்கான அனைத்து தரவுகளும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகுதான், இலங்கை அரசாங்கம் நம்முடை மீனவர்களைத் தொந்தரவுபடுத்தியது என்று நினைத்தோம். இல்லை, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே கச்சத்தீவைக் காவு வாங்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இதுபற்றி புதுக்கோட்டை எம்.பி.யான முத்துசாமி வல்லத்தரசு நாடளுமன்றத்தில் கேட்டபோது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, என்னிடம் போதுமான குறிப்பேடுகள் இல்லை. குறிப்பேடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். அவரது மகள் இந்திரா பிரதமராக இருந்தபோதும் இந்த பிரச்னை வந்தது. கச்சத்தீவு பற்றிய முழு விவரங்கள் அரசின் வசம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இப்படிப்பட்ட இந்திராதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர். அன்றைய முதலமைச்சர் கருணாநிதி எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகப் போய் உள்ளது. கச்சத்தீவைத் தாரை வார்க்கும்போது கருணாநிதி கண்டுகொள்ளாமல் இருந்தார் என்று சிலர் சொல்லும் குற்றச்சாட்டுக்கான முழுமையான மறுப்புத் தகவல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. கச்சத்தீவு விவகாரத்தில் காட்டிய அலட்சியத்தை காஷ்மீர் விவகாரத்தில் காட்டுவார்களா? அதனால்தான் இங்கிலாந்தில் சீக்கியர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக அதைக் கண்டிக்கும் இந்திய அரசு, அமெரிக்காவில் பிரச்னைகளுக்கு ஆளாகும். குஜராத்திகளுக்காகக் குரல் கொடுக்கும் இந்திய அரசு, கேரள மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலியர்களுக்கு எதிராக இத்தாலியுடன் ராஜீய உறவையே முறித்துக் கொள்ளும் அளவுக்குச் செல்லும் இந்திய அரசு தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கையைக் கண்டிக்கும் விஷயத்தில் மட்டும் கள்ள மௌனம் காப்பதன் பின்னணி என்ன? என்று கேட்கிறார் ஆர். முத்துக்குமார். இதுதான் தமிழர்கள் அனைவரின் கேள்வி. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 18/9/2013