கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சுகன்யா பாலாஜி, அருண் பதிப்பகம், 107/8, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 120ரூ.
மண்டபத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியோடு தொடங்கும் கதை, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு பக்கத்திற்கும் படிக்கத் தூண்டும் வகையில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் சுவாரசியமாக அமைந்துள்ளன. புதுமணத்தம்பதிகள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள், கணவன், மனைவி இடையே ஏற்படும் ஈ.கோ. பிரச்சினைகள், கதாபாத்திரங்கள் வடிவில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. தன்னம்பிக்கையை ஊட்டும் வகையிலும் கதை அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நன்றி; தினத்தந்தி, 20/3/13.
—-
சின்ன அரயத்தி, நாராயண், தமிழில்-குளச்சல் மு. யூசுப், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 1, பக். 277, விலை 200ரூ.
கேரளத்துப் பூர்வகுடியான மலை அரயன்களின் வாழ்வியலைச் சின்ன அரயத்தி என்ற நாவலாக, அதே சமூகத்தைச் சேர்ந்தவர் எழுதியுள்ளார். அடிமை சமூகங்களின் அழுகுரல் அடிவயிற்றைத் தாண்டாது. வேதனையை இவர்கள் கண்களில் நீர் கசியாமல் அடக்கிவிடுவர். இந்த மக்களின் மனதில் உள்ள ஆழ்கடல் நீரோட்டத்தில் எழுந்திடும் பூகம்பத்தை வெளிக்கொண்டு வந்துள்ள நாவல் சின்ன அரயத்தி. பழங்குடியினரிடம் பெண் அடிமைத்தனம் கிடையாது என்ற வாதம் நாவலின் தொடக்கத்திலேயே உடைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களான அரயன்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள், அவர்களின் மூலம் என்ன, சொந்த மண் எது? என்பன போன்ற இன வரலாற்றைக் கதை ஓட்டத்தில் சொல்லியிருப்பது சிறப்பு. ஆட்சியாளர்களால் பழங்குடியின மக்கள் சுரண்டலுக்கு ஆளானதை ஆழமாகச் சித்தரித்துள்ளார். சமூகத் தொடர்புகள் வந்தாலும், மலைவாழ் மக்களுக்கு உரித்தான பண்புகள் மாறாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக கதையின் நாயகன் கொச்சுராமன், அறுவை சிகிச்சையைப் புறக்கணித்து, மருத்துவமனையை விட்டு ஓடுவதில் கதை முடிந்துள்ள விதம் அருமை. கதைகள் வரலாறு ஆவதில்லை. ஆனால் வரலாறு கதையாகும்போதுதான் சமூக வெளிப்பாடு தெரியும் என்பார்கள். மலைவாழ் மக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள சின்ன அரயத்தி உதவும். நன்றி: தினமணி, 21/11/11.