கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா
கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 140, விலை 100ரூ.
ரஷ்யாவுக்குச் சென்று அங்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யா இன்று என்ன நிலைமையில் உள்ளது என்பதை விளக்கும் வகையில் சுவைபட இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மனித குலத்தின் நன்மைக்கு ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இருந்த ஆட்சியே ஓர் உதாரணம். அந்த அடித்தளத்தில் இருந்துதான் இன்று சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசுகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். இலவசக் கல்வி, தொழில்புரட்சி, அறிவார்ந்த கொள்கைகள் மூலமாக எளிய மக்களும் மேம்பட்ட வளர்ச்சியை எட்ட முடியும் என்கிறார். ரஷ்யாவில் கம்யூனிஸ ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு மாஃபியா கும்பல்கள் உருவாகத் தொடங்கிவிட்டன. ரஷ்யர்களுக்கு எப்போதும் இரண்டு பாஸ்போர்ட் இருக்கும். மாஸ்கோ நகருக்குள் வருவதென்றால்கூட சிறப்பு அனுமதி பெற வேண்டும். அங்கு அருங்காட்சியகத்தில் உள்ள 30 லட்சம் பொருள்களையும் பார்க்க 6 மாதங்களாகும். ஜார் மன்னர் காலத்து பொக்கிஷங்கள், அருங்காட்சியகத்தில் 86 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் லெனின் உடல், உதவி கேட்பதற்குரிய காரணத்தை ஓர் அட்டையில் ரஷ்யாவில் உள்ள பிச்சைக்காரர்கள் எபதி வைத்திருப்பது, ஒரு குவளை வோட்காவில் 2 ஸ்பூன் மிளகு கலந்து சாப்பிட்டால் ஜுரம் குறையும் என்பன போன்ற வித்தியாசமான பல தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. நூலின் இறுதியில் கூறப்பட்டுள்ள சின்னச் சின்ன துணுக்குகள் கூட மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இருப்பினும் இந்தியர்களின் குணங்களைப் பற்றி ரஷ்யர்கள் தெரிவித்த கருத்துகளை ஆசிரியர் சற்று கவனத்துடன் எழுதியிருக்கலாம். நன்றி: தினமணி, 14/4/2014.
—-
மன்னாதி மன்னன் திரைப்பட கதை வசனம், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
எம்.ஜி.ஆர். நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. அச்சம் என்பது மடமையடா போன்ற பிரபல பால்கள் இடம் பெற்ற படம். கருத்தான கவிநயம் மிக்க வசனங்கள் ஏராளம். கதை வசனம் எழுதியவர் கவியரசு கண்ணதாசன் தற்போது நூலாக வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.