காஷ்மீர் முதல் யுத்தம்
காஷ்மீர் முதல் யுத்தம், ஆண்ட்ரூ வைட்ஹெட், தமிழில் பி.ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 408, விலை-200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/kashmir.html
காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமா? பாகிஸ்தானுக்குச் சொந்தமா? என்பதற்கான முதல் சண்டை காஷ்மீரில் உள்ள பாரமுல்லா நதிக்கரைப் பகுதிகளில்தான் 1947ஆம் ஆண்டு நடந்தது. அதைப் பற்றி ஆராய்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹெட். பிபிசி செய்தியாளரான அவர் காஷ்மீருக்குச் சென்று அந்தச் சண்டையில் தொடர்புடையவர்கள், பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டு இந்நூலை எழுதியிருக்கிறார். நூலின் முடிவில் காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வு என்பது காஷ்மீர் மக்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை கூர்ந்து கேட்பதில்தான் இருக்கிறது. அத்துடன் அவர்களுடைய தலைவிதியை அவர்களையே தீர்மானிக்க விடுவதுதான் சிறந்தது. அது எப்போது எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தேசிய நலன்கள் அதிலும் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கை ஆண்டு வரும் இந்தியாவின் நலன்கள் இருக்கமுடியும் என்கிறார் நூலாசிரியர். காஷ்மீர் பிரச்னையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் சமூக அக்கறையுள்ள அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல். நன்றி: தினமணி, 9/1/2012.
—-
சங்கு, ந. அதியமான், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.
இந்திய நாகரிகத்தின் தொட்டில் என, கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம் முதல் இன்றுவரை சமுதாயத்தில் சங்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உருவ வேறுபாடுகள் பலவற்றை கொண்ட இவற்றுள் வெண்ணிற சங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நமது பண்பாடு, சமுதாயம், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் சங்கு எவ்வகையில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது என்பதை இந்த நூல் விளக்குகிறது. உலகில் வேறெங்கும் காணப்படாத வெண் சங்கு இந்தியாவின் கடல்பகுதிகளில், குறிப்பாக தமிழக கடற்பகுதியான மன்னார்வளைகுடாவில் அதிகஅளவில் கிடைக்கிறது என்பன போன்ற செய்திகள் ஆச்சரியம் அளிக்கின்றன. சங்கு குறித்த உயிரியல் செய்திகள், சங்கு எடுக்கும் தொழில், நுட்பம், அணிகலன் செய்யும் நுட்பம் போன்ற நுட்பமான தகவல்களை பதிவு செய்த விதத்தில்நூல் கவனத்தை கவர்கிறது. மொத்தம் 304 பக்கங்களுடன் நூல் வெளிவந்திருக்கிறது. இதை கன்னிமாரா நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர், 15/9/2013