குமுதம் புத்தக அறிமுகங்கள் – 29.08.2012

வீடு நெடும் தூரம் ரவி பக்கங்கள் 240 விலை 160ரூ பரிசல் பதிப்பகம்

அகிம்சை வழியில் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் சுதந்திரப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருமாறிய காலத்தைப் பற்றிய, ஒரு முன்னாள் போராளியின் அனுபவப் பகிர்வு இந்தப் புத்தகம். 1972-1986 வரை பதினைந்து வருட காலம் ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அப்படியே பதிவு செய்துள்ளார். ஏன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்? ஏன் இலங்கைத் தமிழர்கள், ‘எங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது’ என்று சொல்கிறார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்கிறது. —

நோய்க்கு ‘நோ’ சொல்வோம் டாக்டர் கு. கணேசன் பக்கங்கள் 104 விலை 55ரூ கல்கி பதிப்பகம்

அலர்ஜி, காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி… போன்ற சின்ன சின்ன உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து எலிக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற ஆபத்தான நோய்கள் வரை ஒவ்வொன்றும் ஏன், எவ்வாறு ஏற்படுகின்றன? வரும் முன் காக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை எளிமையாக சொல்லித் தரும் புத்தகம். உடல் ஆரோக்கியத்துக்கு என்னென்ன தாதுச் சத்துக்கள் தேவை? எந்த உணவு வகைகளில் அவை உள்ளன? என்பதையும் அழகாகச் சொல்லுகிறது. வீட்டில் இருக்க வேண்டிய குடும்ப டாக்டர். —

அன்னை – அரவிந்தர் – கருவூர்த்தேவர் ப்ரியா கல்யாணராமன் பக்கங்கள் 144 விலை 120ரூ குமுதம் பு(து)த்தகம்

குமுதத்தில் வெளிவந்த ‘மாண்புமிகு மகான்கள்’ பக்தி தொடரில் அன்னை அரவிந்தர் மற்றும் கருவூர்த்தேவர் பற்றிய பகுதிகளின் தொகுப்பு இந்நூல். தஞ்சைப் பெரிய கோயிலை ராஜராஜசோழன் கட்டினான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அங்குள்ள பிரகதீஸ்வரர் சிலை நிலைபெறக் காரணமானவர் கருவூர்த்தேவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? எல்லோரும் கடவுளிடம் வரம் கேட்போம். ஆனால் விநாயகப் பெருமானே பாண்டிச்சேரி அன்னையிடம் வரம் கேட்டிருக்கிறார், கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆச்சர்யமாக இருக்கிறதா? இதுபோல் பல அபூர்வத் தகவல்களைக் கொண்ட புத்தகம் இது. படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டியது. —

மொழிக் கொள்கை இராசேந்திரசோழன் பக்கங்கள் 320 விலை 180ரூ மங்கைப் பதிப்பகம்

இந்தித் திணிப்பு எதிர்ப்பு, சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவது, தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைப்பது, நீதிமன்றத்தில் வழக்காடும் உரிமை, தமிழ்ச் செம்மொழி அறிவிப்பு… என கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல மொழிப் போராட்டங்களை சந்தித்தது இந்தத் தமிழ்நாடு. ஏன் இத்தனை மொழிப் போராட்டங்கள்? மொழி என்பது ஏன் அவ்வளவு முக்கியம்? மொழி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளையும் நடைமுறைச் சிக்கல்களையும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் இது. நன்றி: குமுதம், 29.08.2012

Leave a Reply

Your email address will not be published.