குருவிக்கூடு
குருவிக்கூடு, முகிலை ராசபாண்டியன், கோவன் பதிப்பகம், சென்னை, பக். 158, விலை 120ரூ.
பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், கதை வாசிப்பிலும் பயன்படுத்தப்பட்ட கதைகள் இவை. மனதில் சிந்தனை அலைகளை வெகுவாகத் தூண்டிவிடும் ஆற்றல் பெற்றவை. மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும், மதங்கள் பாலங்களாக இருக்க வேண்டுமே தவிர, வேலிகளாக இருக்கக்கூடாது என வலியுறுத்தும் கதைகள். மதங்களைக் கடந்து மற்றும் சப்பரம் எடுப்பு, ஒரு சிறிய குழந்தையின் பெரிய மனதைச் சொல்வது, பொய் என்ற கதை. பாத்திரம் பார்த்து என்ற கதையும் மனிதம் பெரிதா, மதநேசம் பெரிதா என்ற கேள்வியையே எழுப்புகிறது. மருத்துவம் என்ற கதை அந்தக் காலப் பச்சிலை வைத்தியத்தின் பெருமையைப் பேசுகிறது. பச்சிலை வைத்தியருக்குப் பணம் கொடுக்க வந்தால், ரூவா வாங்கினா பலிக்காதுன்னு எங்க மாமா சொல்லி இருக்குது. அதனால ரூவா ஒண்ணும் வேண்டாம். இது ஒரு சேவை அவ்வளவுதான் என்று மறுக்கிறார். அன்பின் உச்சத்தை இந்தக் கதை கோடிட்டுக் காட்டுகிறது. மனம் விரிந்தால், பணம் பிரதானமல்ல என்று பேசுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆனால் சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொல்லிவிடும் பாணி, முகிலை ராசபாண்டியன் பாணி சிறந்த தொகுப்பு. -எஸ். குரு. நன்றி: தினமலர், 8/3/2015.
—-
கடமையைச் செய் பலன் கிடைக்கும், வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், விலை 200ரூ.
நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம், அதிகாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும், நமது தலையாயக் கடமைகள், கடமையாளர்கள் ஒரு சிறப்பு ஆய்வு, வாசகக் கடமையாளர்களின் மெய்யறிவும், பொய்யறிவும், தன்னார்வ அமைப்புகளின் கடமையும், மடமையும் ஆகிய அத்தியாயங்களில் பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.