கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ
கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், 9, ஜலகண்டபுரம் ரோடு, இடைப்பாடி 637 101, சேலம் மாவட்டம், பக். 304, விலை 145ரூ.
சென்னை அண்ணாசாலையில் தீவுத்திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலை கம்பீரமாகக் காட்சியளிப்பதை, பலரும் பார்த்திருப்பர். சென்னை என்றவுடன், ஓர் அடையாளமாக இச்சிலை நினைவுக்கு வரும். ஆனால் அந்த தாமஸ் மன்றோ யார்? அவர் தமிழகத்தில், அதுவும் கொங்கு நாட்டில் எவ்வளவு அரும்பணிகள் ஆற்றியுள்ளார் என்பதையெல்லாம் இந்த நூல் விரிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. 1780ல் பழைய மெட்ராஸ் நகருக்கு ஒரு சாதாரண வெள்ளைக்கார ராணுவ சிப்பாயாக வந்து இறங்கிய மன்றோ, தமது அயராத உழைப்பாலும், அறிவாற்றலாலும் எத்தகு உயரிய நிலைகளையெல்லாம் அடைந்து, இந்த தென்னிந்தியாவுக்கே கவர்னராக ஆனவர். வியக்க வைக்கும் சாதனையாளர் மன்றோ பிரவு. 47 ஆண்டகள் நம் மண்ணுக்காக உழைத்த எளிய மக்களோடும் இணங்கிப் பழகிய விவசாய, கைத்தொழில்களை ஊக்குவித்த அந்தப் பெருமகனுடைய உயரிய பண்புநலன்களை இதில் காணலாம். அவர் கம்பங்கூர் சாப்பிட்டதையும், வாழைக்காய் பஜ்ஜியை சுவைத்த தகவலும் உண்டு. குளத்தில் தோள்வரை மறைக்கும் வகையில் ஆடையுடன் பெண்கள் குளிப்பதையும், அப்போது எந்த ஆடவரும் சீண்டாமல் இருக்கும் நம் மரபை வியந்துள்ளார் மன்றோ. வரலாற்று விரும்பிகள் மட்டுமல்லாது இவற்றை ஆட்சியாளர்கள் சகலரும் கற்றறிய வேண்டிய நூல் இது. -கவுதம நீலாம்பரன். நன்றி:தினமலர், 8/4/2012.
—-
மெய்கண்ட சாத்திரங்கள், கா. சுப்பிரமணியம் பிள்ளை, பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை 108, விலை 120ரூ.
14 மெய்கண்ட நூல்களில் உள்ள சைவசித்தாந்தக் கருத்துக்களை அனைவருக்கும் எளிதாக விளக்கும்வகையில் உரைநடை நூலாக இயற்றப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 30/10/2013.