சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி
சிரிப்பாய் சிரிக்கும் தீபாவளி, அகிலா கார்த்திகேயன், தென்றல் நிலையம், ரூ 60 /-
கதை எழுதுவது, அதுவும் நகைச்சுவையாக எழுதுவது வெகு சிலருக்கே கைவந்த கலை. அந்த வரிசையில் நிச்சியம் இடம்பெறுகிறவர் அகிலா கார்த்திகேயன். ‘அடிக்கிற பச்சையில் மேட்சிங் பிளவுஸ், காடி பச்சையில் கைப்பை, ஜோடி பச்சை காலனிகள் இன்று ஒரு பச்சைத் தமிழச்சியாய் அவளை நோக்குங்கால்…’ முதலில் ‘அரிவாள்’ என்றுதான் அந்த வன்முறைப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தனர். இவர் பலமாக எதிர்க்கவே ‘அவள் அறிவாள்’ என்று பெயரை மட்டும் மாற்றி… – இப்படியாக இருபத்தைந்து கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருப்பதோடு’நானும் என் எழுத்தும்’ என்ற ஒரு கட்டுரையையும் சேர்த்திருக்கிறார். ’ஒரே ஒரு வோட்டு’என்ற தலைப்பில் தாம் ஒரு கதையை எழுதியதாகவும் அந்த அரசியல் நையாண்டி கதையைப் பிரசுரித்ததே பெரிது என்று அந்த வார இதழ்க்காரகள் நினைத்து, ‘குறைந்த பட்சம் கதை வெளியான இதழின் ஒரு பிரதியைக்கூட அவர்களுக்கு அனுப்பத் தோன்றவில்லை’, என்றும் அதில் வருத்தப்பட்டிருக்கிறார். இதில் உள்ளவை பெரும்பாலும் ‘மங்கையர் மலர்’,’கல்கி’,‘தினமலர்’போன்ற தீபாவளி மலர்களில் வெளியான ’பாடிகள்’கதைகள். நன்றி: கல்கி (17-03-2013).
—–
போதியின் நிழல், அசோகன் நாகமுத்து அந்திமழை, விலை ரூ. 180. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html
2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனி ஒரு மனிதராக, சீனாவிலிருந்து இந்தியா வந்து திரும்பியவர் யுவான் சுவாங். இவர் இந்தியா வந்தது ’அகத்தேடல்’ காரணமாகவும் பெளத்த தரிசனத்துக்காகவும். ‘பெளத்தம் ஒரு மதமாக இந்தியாவை விட்டு விலகி இருக்கலாம். ஆனால்,சமூகத்தின் அகமனத்தில் புத்தர் கண்மூடி தியானதில் அமர்ந்திருக்கிறார்’ என்று முன்னுரையில் எழுதுகிறார் ஆசிரியர் அசோகன் நாகமுத்து. இந்தியா முழுவதும் பரவியிருந்த பெளத்தித்தின் எச்சமே இப்போது நம்மிடையே இருக்கும் அரச மர வழிபாடு என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். வரைப்பட இணைப்பு, யுவான் சுவாங்கின் பயணப் பாதையைக் காட்டுகிறது. யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாறு சீனமொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்துக்குப் போனது. அதை அடிப்படையாக் கொண்டது இந்தப் புத்தகம். சீனப் பேரரசரின் கட்டளையை மீறியவராய் பெளத்த ஞானத்தை விரிவாக்கி கொள்ளப் பயணித்த யுவான்சுவாங் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியபோது 22 குதிரைகளில் 627 சமஸ்கிருத நூல்களையும், புத்த பிரானின் 115 புனிதப் பொருட்களையும், புத்தரின் பொற்சிலை ஒன்றையும் எடுத்துவந்தாராம். அறுபத்தைந்து வயதில் கி.பி. 664 இல் காலமாகும் வரை யுவான்சுவாங் ஈடுபட்டது அறுநூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி நூல்களைச் சீன மொழியில் எழுதும் பணியில் என்னும் செய்தி பிரமிப்பூட்டுகிறது. நன்றி: கல்கி (17-03-2013).
—–
ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் (விலை: ரூ. 550. வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் – 621310, திருச்சி மாவட்டம். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-816-2.html
யமுனா ராஜேந்திரன் ஈழப்போராட்டம் தொடர்பாக சர்வதேச அரசியல் பின்புலத்தில் வைத்து எழுதிவரும் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். 54 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல், விடுதலைப் போரின் படிப்பினைக்கள், சாதியம், இலங்கை முஸ்லிம்கள் பிரச்சை, ஈழப்பிரச்னையில் மார்க்சிஸ்ட்களின் அணுகுமுறை, அறிவுஜீவிகள், அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகள், மனித உரிமை சார்ந்த பிரச்சனைகள், ஈழப் போராட்டம் தொடர்பான ஆவணப் படங்கள், முள்ளி வாய்க்காலுக்குப் பிந்தைய ஈழ அரசியல் என மிகவிரிவான தளத்தில் பல்வேறு விவாதங்களை முன்னெடுக்கிறது. ஈழப் போராட்டத்தின் அழிவையும் ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தையும் பற்றிய ஆழமான பார்வைகளை உருவாக்கும் முக்கியமான ஆவணம் இது. – யமுனா ராஜேந்திரன். நன்றி: குங்குமம்(18.3.2013).

