சிவப்புத் தகரக் கூரை
சிவப்புத் தகரக் கூரை, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 272, விலை 225ரூ.
நவீன இந்தி இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஞானபீடவிருது பெற்ற நிர்மல் வர்மாவின் நாவல் இது. பருவ வயதில் உள்ள ஒரு சிறுமி எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்குழப்பங்கள், உடல் ரீதியாக எழும் கிளர்ச்சிகள், குதூகலமும், சுற்றியுள்ளன மனிதர்களின் புதிரான நடத்தைகள், ஆசைகள், துயரங்கள், அச்சங்கள் என்று எல்லாமுமே நாவலாக உருப்பெற்றுள்ளன. ஆண் பெண் உறவுகளில் உள்ள சிக்கல்கள் சித்திரிக்கப்படுவதுடன், பெண்களின் வாழ்வு குறித்த பெரும் விவாதத்தை ஒரு சிறுமியின் வாழ்வியல் அமைப்போடு நம்முன் வைக்கிறார் நூலாசிரியர். ஒரு சிறுமிக்கும் இளம் பெண்ணுக்குமான இடைவெளியை மனதளவில் கடப்பது என்பத சுலபமானதல்ல என்பதை, அச்சிறுமியின் நிறைமாத கர்ப்பிணியான அம்மா, ஆங்கில மூதாட்டி, அத்தை, மருத்துவச்சி, அப்பா, தம்பி, சித்தப்பா, அவரது மகன் போன்றோர் வழி எதிர்கொள்ளச் செய்வது படிப்போருக்கு புதிய உலகத்தைக் காட்சிப்படுத்துகிறது. கூடுதல் கவனத்துடன் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை நாவல் படிப்போர் உணரும் இடங்கள் பல. நன்றி: குமுதம், 22/12/2014.
—-
வாழ்வியல் உண்மைகள், முனைவர் வ. கலைவாணன், பவணந்தி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
வாழ்வியல் உண்மைகள் பலவற்றின் சுருக்கமான தொகுப்பு நூல். அகிம்சை தொடங்கி வெற்றி ஈறாகத் தொகுக்கப்பட்ட உண்மைகள் பலவும் சிந்திக்க வைக்கின்றன. வெற்றி பெற்றவர்கள் தோல்விகளைச் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் போன்ற உண்மைகளை உணர்த்திடும் நூல். நன்றி: தினத்தந்தி, 17/12/2014.