சீறா வசன காவியம்
சீறா வசன காவியம், முரளி அரூபன், கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டிபாபு தெரு, சென்னை 5, பக்கங்கள் 1328, விலை 850ரூ.
கடந்த 1850இல் வாழ்ந்த காயல்பட்டினம், கண்ணகுமது மகுதூமும்மது புலவர் நபிகள் பெருமானின் வரலாற்றை வசன காவியமாக மிகவும் விரிவாக எழுதியுள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவில் உமறு புலவர், சீறாப்புராணம் இயற்றினார். இதைப் புலவர்களே படித்து அறிய முடியும் என்பதால், பலரும் அறியவேண்டி எளிய உரைநடை வடிவில், இந்த நூலை எழுதியுள்ளார். 125 ஆண்டுகளுக்குப் பின், அரிய பெரிய செம்பதிப்பாக, 1328 பக்கங்களில் இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல் வெளிவந்துள்ளது பாராட்டத்தக்கது. முகம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை 5000 விருத்தப்பாக்களில் உமறு புலவர் இயற்றினார். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பொருள் சிதறாமல், அழகிய உரைநடையில் நபிகள் பெருமானின் வரலாறு இதில் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே தங்க நகையில் வைரம் பதிப்பதுபோல, தேவையான இடங்களில் மூலச்செய்யுள்களையும், தகவல்களையும் அடிக்குறிப்புகளையும் எழுதியுள்ளது வாசிப்புக்கு தடையற்ற சுகம் தருகிறது. உரைநடையில் கூட, செய்யுள் போல, கடினமான நடை உண்டு. இதைப் பதம் பிரித்து அருஞ்சொற்களை விளக்கி அரபு பாரசீக சொற்களை புரியவைத்து சிறப்புப் பெயர்களுக்கு விளக்கம் தந்து வெளியிட்டுள்ள பதிப்பாசிரியர் பணி பாராட்டுக்குரியது. பிற்பகுதியில் தொகுத்துத்தந்துள்ள அருஞ்சொற்பொருள், பழமொழி, நீதி வாக்கிய அகராதி, நயமிகு தொடர் அகராதி, படங்கள், பதிப்பாசிரியரின் பத்தாண்டு உழைப்பை இந்நூல் காட்டுகிறது. -முனைவர் மா.கி. இரமணன். நன்றி: தினமலர் 3, மார்ச் 2013.