தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.
தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷினி, மித்ரஸ் பதிப்பகம், பக். 400, விலை 250ரூ.
மனிதனாய், மாமனிதனாய் டி.கே.சி. தடம் பதித்த தன்மையைத் தடம் பதித்த மாமனிதன் என்ற தலைப்பில் நூலாக்கியிருக்கிறார் தி. சுபாஷினி. டி.கே.சியும் சான்றோர்களும் என்னும் பகுதியில் டி.கே.சி.யால் மதிக்கப் பெற்ற வள்ளுவர், பாரதி, கவிமணி, ராஜாஜி, காந்திஜி, ஆகியோர் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. டி.கே.சி.யுடன் தொடர்பு கொண்டிருந்த கல்கி, ஐஸ்டிஸ் மகராஜன், வித்வான் சண்முகசுந்தரம், டி.டி. திருமலை, கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ம.பொ.சி., தி.க.சி. முதலானோர் பற்றியும் நூல் எடுத்துரைக்கிறது. டி.கே.சி என்று அழைக்கப்பெறும் சிதம்பரநாதன் என்னும் ரசிகமணியின் வாழ்க்கையை அழகாகத் தெரிவிக்கும் இந்த நூலில் அவரது நிழற்படங்களையும் தேடிக் கண்டுபிடித்து சேர்த்திருப்பது சிறப்பு. வழக்கறிஞர் உடையில், மனைவி பிச்சம்மாளுடன் டி.கே.சி. என கறுப்பு வெள்ளைக் காவியமாய் காட்சியளிக்கிறது. டி.கே.சி. யின் வாழ்க்கையைத் தெரிவிக்கும் இந்த நூல் டி.கே.சி. தொடர்புடைய அனைத்தையும் விளக்குவதால் இதை டி.கே.சி.யின் உலகம் எனச் சொல்லும் அளவிற்றுக்குச் சிறப்பாய் அமைந்துள்ளது. -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 26/5/2013.
—-
திருநாவுக்கரசர், முகிலை ராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பக்.72, விலை 30ரூ.
சைவ சமய நாயன்மார்கள் அறுபத்துமூவர், அவர்களில் தேவாரம் பாடியவர் என்று சிறப்பிக்கப்பட்டவர் திருநாவுக்கரசர். இளமையிலேயே இழப்புகளை சந்தித்தவர். தான் வணங்கும் இறைவனால் இந்த இழப்புகளை தவிர்க்க முடியவில்லையே எனும் கோபத்தால் சமண சமயத்திற்குப் போனவர். பின் மனம் மாறி, திரும்பி சைவ சமயத்திற்கு வந்தார். அவரது வரலாற்றை மிக எளிய தமிழில் அழகிய வடிவமைப்பில் நுல் ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நன்றி: தினமலர், 26/5/2013.