தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010)
தமிழ் சிறுகதைக் களஞ்சியம்(1900-2010), தமிழ்மகன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 288, விலை 120ரூ.
சிறுகதையின் எல்லை வளர்ந்துகொண்டே வருகிறது. பலரும் பலவிதமாக எழுதுகின்றனர். அந்த வானவில்லின் வர்ண ஜாலங்களை இதில் காணலாம். ஒவ்வொரு கதையும் ஒரு ரகம், ஒரு நிறம், ஒரு மணம். பாரதியார், வ.வே.சு. ஐயர், அ. மாதவையா, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. சிறுகதையின் சாரத்தையும் விளக்கி, அதன் சிறப்பையும் சொல்லிச் செல்கிறார் தமிழ்மகன். புதிதாக எழுதவரும் இளம் எழுத்தாளர்களுக்கு இந்தக் கதைத் தொகுதி ஒரு பாலபாடமாக இருக்கும். -எஸ். குரு. நன்றி: தினமலர், 6/4/2014.
—-
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு, எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், பக். 88, விலை 60ரூ.
அவசரமும், ஆவேசமும் போட்டா போட்டியும் நிறைந்துவிட்ட இன்றைய வாழ்வில், யதார்த்த நிலையில் வாழ்வில் வெற்றி காணும் வழிகளை இந்நூலில் வகுத்துக்காட்டுகிறது. போட்டி, பொறாமைகளைத் தவிர்த்து, உறவினர்கள், நண்பர்கள் உடன் நேசம் பாராட்டுதலும், தேவையற்ற சர்ச்சைகள், விவாதங்களைத் தவிர்த்ததும் மன அழுத்தத்தை நீக்கி நிம்மதியைத் தரும். உயர்வான வாழ்வையும் தரும் என, ஆசிரியர் விளக்கியுள்ளார். மனிதவள துறை பயிற்சியாளரான ஆசிரியர், மேலாண்மையும் பயின்றவர். மாற்றங்கள் வேண்டும் என வலியுறுத்தியும் பல நல்ல கருத்துகளை வடித்துள்ளார். இவற்றுள் பலவும் காலம் காலமாக சொல்லப்பட்டு எழுதப்பட்டும் வந்தவைதாம். படித்து நினைவூட்டிக் கொள்ளலாமே. -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 6/4/2014.