திராவிடமா? தீரா விடமா?
திராவிடமா? தீரா விடமா?, ஓவியப்பாவலர் மு.வலவன், முத்தையன் பதிப்பகம், பக். 296, விலை 180ரூ.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் என்னும் நான்கு மாநிலங்களையும் புதுச்சேரி என்னும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது திராவிட நாடு. இந்தத் திராவிட நாட்டில் பெரும்பான்மை மக்களால் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும், இந்த நான்கு மொழிகளில் எந்த மொழியைத் திராவிட நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது? என்னும் கேள்விக்குத் திராவிட நாட்டுக்காரர்களால், எந்தப் பதிலையும் தரமுடியவில்லை. ஆட்சி அமைப்பு வசதிக்கு, ஒரு மொழி, ஒரு நாடு என்னும் கருத்து உகந்ததாக இருக்கும் என்னும் கருத்தை அடிநாதமாகக் கொண்டு, இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தேசியத் தலைவர்களையும், திராவிடத் தலைவர்களையும், தமிழ் தலைவர்களையும் நேரில் சந்தித்து உரையாடிப் பழகும் வாய்ப்பினைப் பெற்ற ஓவியப் பாவலர், மு. வலவன் படைத்துள்ள நூல் இது. எனவே திராவிடத்தால், தமிழ்நாடும் திராவிடத் தலைவர்களால் தமிழ் மக்களும் அடைந்த இன்னல்களை அழகாகக் காட்டியுள்ளார். தமிழனுக்கு எனச் சுயாட்சி பெற்ற நிலப்பகுதி அமையும் வரை, தேசியமே பாதுகாப்பு எனக் காட்டுகிறது இந்த நூல். கடவுள் மறுப்பு என்னும் கொள்கை கொண்டவர்களால் ராமாயண எதிர்ப்பும், ஆபாசப் பேச்சும் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன என்பதை, வரலாற்று ஆதாரத்துடன் வழங்குகிறது. அண்மைக்கால வரலாற்று நூல்களில், தனித்துவம் பெற்ற வரலாற்று நூல் இது. -முகிலை பாண்டியன். நன்றி: தினமலர், 12/5/2013.
—-
டாலர் நகரம், திருப்பூர் ஜோதிஜி, நான்கு தமிழ் மீடியா படைப்பு ஆய்வகம், பக். 247, விலை 190ரூ.
ஆயத்த ஆடைகளின் சொர்க்கமாகத் திகழும் திருப்பூர் பற்றிய இந்த, டாலர் நகரம் நூல் இணையதளத்தில், கூகுள் தேடலில் தேவியர் இல்லம் திருப்பூர் தலைப்பில் நான்கு ஆண்டுகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்பது, பரவசம் ஊட்டும் அதிசயமாக உள்ளது. ஜோதிஜி, காரைக்குடியிலிருந்து மஞ்சள் பையுடன், எதிர்காலத்தைத் தேடி திருப்பூருக்கு வந்து, 20 ஆண்டுகளில் அதைக் கண்டறிந்து வெற்றி பெற்ற கதையை சுவாரசியமாக எழுதியுள்ளார். இதைப் படிப்பவர், தாமும் உயரத்துடிப்பர். தன் 20 ஆண்டு வியர்வையை எழுதுகோலில் நிரப்பி சுவைபட உயர்வின் எல்லையை அளந்து தந்துள்ளார். சில, பன்னாட்டு நிறுவனங்களின் சுயநல ஆசையால், எதிர்கால சமூகமே அழிந்துவிடும் போலிருக்கிறது என்ற அச்சத்தை எழுதுகிறார். அடிப்படை தொழிலாளர் வர்க்கத்தின் அறிவற்ற தன்மையால் எய்ட்ஸ் வளர்க்கும் பெருநகரங்களில் கரூர், நாமக்கல் அடுத்து திருப்பூர் இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. தொழில் தேடி வந்து, தொழிலாளி ஆகி, பின் உழைத்து உயர்ந்து முதலாளி ஆன, மனிதரின் மனசாட்சி ஓவியம் இந்த நூல். -மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 12/5/2013.