திருப்பாவை அமுதம்
திருப்பாவை அமுதம், தாடா. ஸுப்ரமண்யம், தாடா. ஸுப்ரமண்யம், கைத்தறி நகர், நிலையூர், மதுரை 625005, விலை 230ரூ.
தமிழ் மறை எனப் பாராட்டப்படும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தின் ஒரு பகுதிதான் திருப்பாவை. ஸ்ரீமத் நாராயணனைத் துதித்துப் போற்றும் பாடல்களின் தொகுப்பாகிய திவ்யப்ரபந்தத்தை இயற்றிய 12 ஆழ்வார்களுள், குறிப்பிடத்தக்கவர் பெரியாழ்வார். இவரது பெண் பிள்ளைதான் ஸ்ரீ ஆண்டாள். இவர் ஸ்ரீ நாராயணன் மீது கொண்ட அளவிட முடியாத காதலால், அவனையே தனது கணவனாக மனதில் வரித்து, பக்தி பரவசத்துடன் பாடிய 30 பாடல்களின் தொகுப்பே திருப்பாவை. மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுவதால், இம்மாதத்தில் தினமும் அதிகாலையில் ஒரு பாடல் வீதம் 30 நாட்களும் திருப்பாவை பாசுரங்கள் ஆலயங்களிலும், வீடுகளிலும் ஓதப்படுகின்றன. இவற்றில் பக்தி, யோகம், ஞானம், கர்மம்… என்று முக்திக்கான எல்லா அம்சங்களும் உள்ளன. இத்தகைய திருப்பாவையின் 30 பாசுரங்களுக்கும் தனித்தனியாக பதவுரை, விளக்கவுரை தந்து இந்நூலைத் தொகுத்தள்ளார் ஆசிரியர். இவற்றுக்கு மேலாக ஒவ்வொரு பாடலிலும் பொதிந்திருக்கும் ஆன்மிக வேதாந்தக் கருத்துக்களை, வேத உபநிடதங்களின் அடிப்படையிலும், இதிகாசங்களில் வரும் கதைகளைக் கொண்டும், உலக நிகழ்வுகளைக் கொண்டும், வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்டும் ஓர் ஆராய்ச்சியாளரின் அறிவார்ந்த விளக்கங்களுடன் எளிய முறையில் எடுத்துக் கூறுவது படிக்கப் பரவசமாக உள்ளது. -பரக்கத். நன்றி: துக்ளக், 26/3/2014.
—-
கால்நடை மருத்துவம் பற்றிய சிறந்த நூல், சங்கம் பதிப்பகம், 43, மலையப்பெருமாள் தெரு (பிராட்வே பேருந்து நிலையம் அருகே), சென்னை 1, விலை 300ரூ.
உலகில் 10 லட்சம் பூச்சி இனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கால்நடைகளுக்கு நோய்களை உண்டாகும் பூச்சிகள் பற்றிய விவரங்களைக் கூறுவது, கால்நடை பூச்சியியல் மற்றம் மென்னுண்ணியியல். கால்நடைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வழியில் கல்வி போதிக்கும் நோக்கத்துடன், இந்நூலை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் சி. சவுந்தரராஜன் எழுதியுள்ளார். வண்ணப்படங்களுடன் கூடிய இந்நூல் அத்துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 26/3/2014.