தி.க.சி. என்றொரு தோழமை
தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 250, விலை 281ரூ.
தோழர் தி.க.சி. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன், 2014, மார்ச், 25ம் தேதி மறைந்தார். அவரது நினைவைப் போற்றும்வகையில், பல்வேறு அறிஞர்கள், அஞ்சலி செலுத்தினர். அவற்றை நூலாக்கம் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தில் தொகுப்பாசிரியர், 52 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். நாளிதழ்கள், பேரிதழ்கள், சிற்றிதழ்கள், மின்னிதழ்கள் என்று, அனைத்துவிதமான பத்திரிகைகளிலும், வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த தொகுப்பில் கி.ரா., பொன்னீலன், வண்ணநிலவன், பாவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் தி.க.சி. குறித்து எழுதியுள்ளனர். தோழர்கள் தி.க.சி.யுடன் இறுதி நாட்களில் உரையாடிய உரையாடலின் வழி, அவர் இன்னும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடனேயே இருந்து தெரியவருகிறது. தி.க.சி., குறித்து அறிய விரும்புவோருக்கும், ஆராய விரும்புவோருக்கும் இந்த நூல் வழிகாட்டியாக விளங்கும். தொகுப்பாசிரியர், தி.க.சி.யின் உரையாடல்கள், கடிதங்கள் ஆகியவற்றையும் தொகுத்து வெளியிடலாம். -முனைவர் இராஜ. பன்னிருகைவடிவேலன். நன்றி: தினமலர்,18/10/15.