தீராநதி நேர்காணல்கள்
தீராநதி நேர்காணல்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 216, விலை 200ரூ.
தீராநதியில் வெளியான ஜெயகாந்தன், சுஜாதா, ஐராவதம் மகாதேவன், வைரமுத்து, பாலுமகேந்திரா, மாலதி மைத்ரி, உள்ளிட்ட 15 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்து குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டுள்ளது. பல்துறை அறிஞர்களின் துறைசார்ந்த கருத்துக்கள், அரிய தகவல்கள் என்று புதிய உலகிற்குள் நம்மை பயணிக்க வைக்கும் நூல். கலைஞனுக்கும் சமூகத்திற்குமான ஒரு உறவை ஜெயகாந்தன் நேர்காணல் நமக்கு காட்டுகிறது. தமிழின் தொன்மையை ஐராவதம் மகாதேவன் உயர்த்திப்பிடிக்கிறார். பெண், பெண்மை, பெண்ணியம் மீதான இலக்கியவாதிகளின் ஆதிக்கத்தை மாலதி மைத்ரி முன்வைக்கிறார். மதமும் சாதியுமே பெண்ணடிமைத் தனத்திற்கு முக்கியக் காரணம் என்று சிவகாமி வாதிடுகிறார். இப்படி ஒவ்வொருவனின் நேர்காணல்களும் ஒரு பட்டறிவை நமக்கு போதிக்கின்றன. இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமன்று. வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் நிறைவு தரும் ஒரு கவனிக்கத்தக்க தொகுப்பு இந்நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 20/11/2013.
—-
சாதனை வெற்றிக்க ரகசிய வழி, மானோஸ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 80ரூ.
சாதனையின் அடித்தளமே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை கொடுக்கிறது இந்த நூல்.
—-
கணித மேதை ராமானுஜன் வரலாறு, இரா. சிவராமன், பை கணித மன்றம், 9/11, தெற்கு கங்கை அம்மன் கோவில் இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை, விலை 390ரூ.
உலக அளவில் பிரபலமான கணிதமேதையான ஸ்ரீ நிவாச ராமானுஜனின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் கணிதக் குறிப்புகள் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வெளியாகி உள்ளன. இப்போது எண்களின் அன்பர் ஸ்ரீநிவாச இராமானுஜன் என்ற தலைப்பில் அவரைப் பற்றிய சிறந்த நூல் வெளியாகியுள்ளது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமைந்துள்ள இந்த நூலில், ராமானுஜன் நினைவாக வெளியிடப்பட்ட தபால்தலைகள், அவர் எழுதிய கடிதங்கள், அரிய புகைப்படங்களும் இடம் பெற்றிருப்பது சிறப்பாகும். இந்தியாவில் ராமானுஜனுக்கு உரிய மதிப்பீடு எவரும் வழங்கவில்லை என்பதை சுட்டி காட்டும் நூலாசிரியர், அவருடைய கணித ஆற்றல் உலகளவில் பறைசாற்ற உதவியது என்பதை காணும்பொழுது நிம்மதி அடையலாம் என்பதையும் அழுத்தமாக கூறி உள்ளார். கணிதத்தை பற்றியும், ராமானுஜனை பற்றியும் மேலும் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு உதவும் நூல். நன்றி: தினத்தந்தி, 13/11/2013.