தேசத்தை நேசிப்போம்
தேசத்தை நேசிப்போம், இளைஞர் இந்தியா செந்தமிழ்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், 109, பெருமாள் கோயில் தெரு, மாதவரம், சென்னை 60, பக். 335, விலை 150ரூ.
நம் தேசம் காத்த தலைவர்களின் தியாகங்களையும் பாரதத் திருநாட்டின் மாபெரும் மாண்புகளையும் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட நூல். ஒரு பாரதபூமி ஒரு நாளில் ஒரு எளிய நிகழ்வில் ஒரு தனிப்பட்ட மனிதரின் முயற்சியில் விடுதலைக் கனியை எட்டிவிடவில்லை. அதற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள், செக்கிழுத்தவர்கள், கல்லுடைத்தவர்கள், கைவிலங்கு, கால்விலங்கு, இரும்புக் குண்டுடன் வாழ்வை முடித்தவர்கள் எத்தனையோபேர். அவர்களின் வரலாறுகளை இன்றைய இளைய சமுதாயமும் அறிந்து கொண்டால்தான் சுதந்திரத்தின் மதிப்பை உணர முடியும் என்று தேசிய விதையை வரலாறாகப் பதிவு செய்யும் நூல். படிக்கப் படிக்க பிரமிப்பு. நன்றி: குமுதம், 24/4/2013
—-
பகவத்கீதை, ஸ்ரீ.உ.வே. காரப் பங்காடு வேங்கடாசாரிய ஸ்வாமி, திருமால் பதிப்பகம், 20, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை 600004, பக். 500,விலை 200ரூ
உலக மக்கள் இன்புற்று வாழ்வதற்கு இறையருளும், குருவருளும் தேவை. குருவை ஆச்சாரியன் என்றும் அழைப்பர். ஆசாரியன் இறைவனை அடையும் வழி கூறுவார். ஸ்ரீ கண்ணன்தான் குருவாகவும் கருதப்பட வேண்டும் என்று கருதியே, கீதையைச் சொன்னான் என்பர் பெரியர். திருமழிசையாழ்வாரும், சேயன் அணியன் என்று துவங்கும் பாசுரத்தில் கீதையின் உயர்வைக் கூறியுள்ளார். இத்தகு பெருமை வாய்ந்த கீதைக்கும் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், ஸ்ரீ இராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோர் உரைகள், பலராலும் எளிமைப்படுத்தப்பட்டன. இந்நூல் இராமானுஜரின் உரையை மிக எளிய முறையில் விவரிக்கிறது. இந்நூலாசிரியர், கீதை அமுதத்தை தாம் மட்டும் பருகிக் களிக்காமல், ஏனையோர்க்கும் சென்னையில் சொன்னவர். அவர் சொற்பொழிவுகளின் சுருக்கமே இந்நூல். இந்நூலின் கீதையின் 18 அத்தியாயங்களுக்கும் விளக்கமான உரை காணலாம்.நூலின் பிற்பகுதியில் ஸ்ரீ கீதாசரம சுலோகார்த்தம் விளக்கியுள்ளதை, அனைவரும் படித்துப் பாராட்டுவர் எனலாம். அனைவரும் படிக்கத் தக்க நல்ல நூல். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 15/9/2013 பகவத்கீதை, ஸ்ரீ.உ.வே. காரப் பங்காடு வேங்கடாசாரிய ஸ்வாமி, திருமால் பதிப்பகம்