தேம்பாவணி
தேம்பாவணி, வீரமாமுனிவர், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி, விலை 2000ரூ.
இத்தாலியைச் சேர்ந்தவரான ஜோசப் பெஸ்கி, 1680ம் ஆண்டு பிறந்தவர். கிறிஸ்தவ தொண்டராக, 1710ல் இந்தியாவுக்கு வந்தார். தமிழின் சிறப்பில் மனதைப் பறிகொடுத்த அவர், தமது 30வது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து, சிறந்த கவிஞராக உருவானார். தமது பெயரையும் “வீரமாமுனிவர்” என்று மாற்றிக்கொண்டார். தமிழ் எழுத்துக்களுக்கு அழகிய வடிவம் கொடுத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் எழுதிய தமிழ்க்காவியம் தேம்பாவணி. மிகப்பெரிய நூல் அது. சற்றுக் கடின நடையில் எழுதப்பட்ட தேம்பாவணிக்கு இளமையிலேயே துறவியானவரும், பட்டங்கள் பல பெற்று திருச்சியில் உள்ள கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வருபவருமான அருள் சகோதரி முனைவர் மார்க்கரெட் பாஸ்டின் உரை எழுதியுள்ளார். எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிய நடை. பெரிய அளவில் 3616 பக்கங்கள் கொண்ட பெருநூல் இது. பல ஆண்டுகள் பாடுபட்டு உரை எழுதிய முனைவர் மார்க்கரெட் பாஸ்டின், தமிழுக்கு அரிய தொண்டாற்றியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 18/3/2015.
—-
இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 245ரூ.
கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மொழி, இனம் ஆகியவைகளால் மக்கள் பலவகையாகப் பிரிந்திருந்தாலும் விழாக்கள் மற்றும் விரதங்களின் போது ஒன்றிணைந்து வாழ்கிறார்கள். அத்தகைய விழாக்கள் குறித்தும், விரதங்கள் பற்றியும் மாநில வாரியாக இந்த நூலில் ப. முத்துக் குமாரசுவாமி விரிவாக எடுத்து கூறியுள்ளார். இந்த விழாக்கள் மற்றும் விரதங்களில் நுட்பமான தத்துவங்களும், ஆன்மிகக் கருத்துகளும் பொதிந்து கிடக்கின்றன என்பதை அவர் வெளிக்கொணர்கிறார். நன்றி: தினத்தந்தி, 18/3/2015.