நன்றி ஓ ஹென்றி
நன்றி ஓ ஹென்றி, எஸ். சங்கரநாராயணன், பொக்கிஷம் புத்தக அங்காடி, பக். 208, விலை 150ரூ.
உலகப்புகழ் கதை சொல்லி ஓ. ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். இது சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை நகர்த்திக்கொண்டே சென்று, இறுதியில் நெகிழ்ச்சியை ஒரு நெற்றிப் பொட்டாக வைப்பதிலாகட்டும், ஒரு கதையில் கலைஞன் தன் வாழ்க்கையில் சலனம் விலக்குவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும், சமரசமாகி விடுவதைச் சொல்லி இறுதி ஆணி அடிபப்திலாகட்டும், வயது ஒன்றாத திருமணத்தின் முரண்பட்ட உலர்ந்து உணர்வுகளைச் சொல்லி விரக்தி கூட்டுவதிலாகட்டும், பாலத்துக்கு ஊர்ப்பணத்தில் அம்மாவுக்கு சிலை வைக்கும் தலைவர், செத்துப்போன பின்பான ஊர்க்களேபரத்தைத் தானே எழுத்தால் நடத்திச் செல்லும் பரபரப்பிலாகட்டும், சுவாரசியம் கூட்டுகிறார் நூலாசிரியர். ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கற்பனைக் களம். சில கதைகளில் முடிவுகள் முன்பே தெரிந்துவிடுகின்றன. படிக்கலாம். -கவிஞர் பிரபாகரபாபு. நன்றி: தினமலர், 21/6/2015.
—-
பாலும் தெளிதேனும், ஆதிரை பதிப்பகம், கோவை, விலை 40ரூ.
அவ்வை பாட்டியின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவற்றுடன் துறைமங்கலம் சிவப்பிரகாசரின் நன்னெறி, அதிவீரராம பாண்டியனின் வெற்றிவேற்கை (நறுந்தொகை), உலகநாதன் எழுதிய உலக நீதி போன்ற நீதிபோதனை பாடல்களுக்கு எளிய முறையில் விளக்கம் எழுதியிருக்கிறார் உரையாசிரியர் கி. சுப்ரமணியன். நன்றி: தினத்தந்தி, 17/6/2015.