நாம் பிரிந்துவிட வேண்டாம்
நாம் பிரிந்துவிட வேண்டாம், டாக்டர் யூசுப் அல்கர்ளாவி, தமிழில்-பேராசிரியர் கே.எம். இல்யாஜ் ரியாஜி, வேர்கள் பதிப்பகம், 52/1, மண்ணடி தெரு, சென்னை 600001, பக். 292, விலை 175ரூ.
ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வெற்றிக்கு வழி கூறும் மார்க்கம், இஸ்லாம். அது இன்று சில கருத்து வேறுபாடுகளால் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று செயல்படுகிறது என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் இந்நூலாசிரியர், இம்மார்க்கத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள், பிரிவினையை உருவாக்கும் கருத்து மோதல்களைக் கைவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்நூலில் வலியுறுத்துகிறார். கத்தார் நாட்டு இஸ்லாமிய அறிஞரான இந்நூலாசிரியரின் அரபி நூலை, சென்னை, மந்தைவெளி தலைமை இமாம், எளிய தமிழ்நடையில் மொழியாக்கம் செய்துள்ளார். இஸ்லாம் போன்ற உலகளாவிய ஒரு பெரிய அமைப்பிற்காக உழைப்போர் அனைவரும் ஓரணியில், ஒரே தலைமையின் கீழ் இயங்குவது என்பது சாத்தியமற்றது. அந்த நிலையில் கருத்து வேறுபாடகள் ஏற்படுவதும் தவறு அல்ல என்று கூறும் ஆசிரியர், அது ஒரு எல்லைககுள் கட்டுப்பட வேண்டும் என்கிறார். இந்தக் கருத்து வேறுபாடுகள் மார்க்க நடைமுறையில் எந்தெந்த விஷயங்களில், எப்படி ஏற்படுகிறது, அவற்றுக்குத் தீர்வு காண்பது எப்படி என்பதை ஆய்வு ரீதியில், மார்க்க ஆதாரங்களைக் கொண்டு விளக்குகிறார். நாம் கடைபிடிக்கும் வழிமுறை சரியா, தவறா என்று இஸ்லாமியர்களின் குழப்பத்தை நிவர்த்தி செய்வதோடு, இஸ்லாத்துக்குள் எந்த வேற்றுமையும் இல்லை என்ற ஒருங்கிணைப்பு உணர்வையும் இந்நூல் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இன்று பல பிரிவுகளாகப் பிரிந்து நிற்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும், இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்நூல் பெரிதும் உதவும். -பரக்கத். நன்றி: துக்ளக்
—-
பாரதம் புகழும் பாரத ரத்னாக்கள், சிந்தா சேகர், அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு அனெக்ஸ், ஜெகன்னாத நகர், வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ.
பாரத ரத்னா விருது பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்தளிக்கிறது இந்த நூல். உலகின் தலைசிறந்த பரிசாக நோபல் பரிசு விளங்குகிறது. பாரதத்திலும் பல உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் எல்லாம் முதன்மையாய் விளங்குவது பாரத ரத்னா விருதாகும். பாரத ரத்னா விருது அரசியல், கல்வி, சட்டம், அறிவியல், சமூகத் தொண்டு, கலை, தொழில் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசியல் துறையைச் சேர்ந்தவர்களே இந்த விருதினைப் பெருமளவில் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் பாரத ரத்னா விருது பெற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெளிநாட்டினர் சிலருக்கும் இந்த விருது அளித்த கவுரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பாரத ரத்னா விருது பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கக் குறிப்பை தொகுத்தளித்திருக்கிறார் சிந்தா சேகர். நன்றி: தினத்தந்தி, 17/7/13