ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்

ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள், தொகுப்பாசிரியர் ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை 83, பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-1.html

ந.பிச்சமூர்த்தி மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, கலைமகள், தினமணி, சுதேசமித்திரன், கலாமோகினி, கிராம ஊழியன், பாரததேவி, ஹனுமான், ஜெயபாரதி, சிவாஜி, எழுத்து, பி.எஸ். ராமையா மணி மலர் உள்ளிட்டவற்றில் எழுதிய கட்டுரைகள், அவர் எழுதிய முன்னுரைகள் வ.ரா., பி.வி. சுப்பிரமணியன் நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகள் மற்றும் ந.பிச்சமூர்த்தி எழுத்து செல்லப்பாவுக்கும், சு. சங்கரசுப்பிரமணியனுக்கும் வழங்கிய முழுநீளப் பேட்டி என தொகுக்கப்பட்டிருக்கிறது. ந.பிச்சமூர்த்தி கவிதை நூல்கள் அவரின் வாழ்நாளின்போதே வெளிவந்து பல்கலைக்கழகங்களில் பாட நூலாகவும் இடம் பெற்றது மட்டுமின்றி, அவர் வாழ்ந்த காலத்திலேயே சிறப்பான முறையில் விமர்சிக்கப்பட்டவர் என்பதுவும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தினமணியில் 1936 ஆம் ஆண்டில் பாரதிக்குப் பிறகு சிறந்த கவிஞர்களாக கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை, பாரதிதாசன், ச.து.சு. யோகி ஆகியோரைப் பட்டியலிட்டார் ந. பிச்சமூர்த்தி. பிற்காலத்தில் அவரும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பது பெருமைக்குரியது. கவிஞராக, சிறுகதை புனைபவராக அறியப்பட்ட ந.பிச்சமூர்த்தி சிறந்த கட்டுரையாளராகவும் மிளிர்ந்தார் என்பதை மெய்ப்பிக்க இந்நூல் உதவுகிறது. கட்டுரைகளில் வாழ்வின் அனைத்து விஷயங்களையும் தொடுகிறார். வ.ரா. பற்றியும், பி.எஸ். ராமையா பற்றியும் அன்று ந.பிச்சமூர்த்தி வழங்கிய குறிப்புகள், இன்று பலரின் கருத்துகளாக உருமாறி இருப்பதே அவரின் கணிப்பின் சிறப்பை உணர்த்தும். 18 ஆண்டுகள் எழுதாமல் கோயில் நிர்வாக அலுவலராக இருந்த அவர் கோயிலுக்குள் பேசப்படும் பரிபாஷைகளை நுட்பமாகவும் விரிவாகவும் ஒரு கட்டுரையில் விளக்கியிருப்பதை படித்துப் பார்த்தால்தான், அதனை அனுபவிக்க இயலும். (உம், சூலம் என்றால் சம்பளம் மூன்று ரூபாய், பஞ்சா என்றால் சம்பளம் ஐந்து ரூபாய், விளக்குமாறு, துடைப்பக்கட்டை என்றால் திருவலகு. நன்றி: தினமணி, 19/8/2013.  

—-

 

பைபிள் கதைகள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-869-9.html

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இரு பகுதிகள் உள்ளன. இயேசுவுக்கு முந்திய வரலாற்றை விவரிப்பது பழைய ஏற்பாடு. இயேசு பிறப்பு முதல் மறைவு வரை நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவது புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாட்டை 50 கதைகளாகவும், புதிய ஏற்பாட்டை 50 கதைகளாகவும் இந்த நூலில் எளிமையாகவும், இனிமையாகவும் எழுதியுள்ளார் கோசுதா. படங்களும் இடம் பெற்றுள்ளன. இயேசுவின் புனித வரலாற்றை அறிந்து கொள்ள சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 28/11/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *