பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்
பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும், ஞா. தேவநேயப் பாவாணர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32, பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, பக். 192, விலை 95ரூ.
தமிழ் மொரீ, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்புகளிலான கட்டுரைகளும், பண்டைத் தமிழ் நாகரிகம் பற்றி, 14 தலைப்புகளிலான கட்டுரைகளும், கலைகள் வரிசையை விவரிக்கும், 23 கட்டுரைகளும், தமிழர் அறிவியலை போற்றும் 24 கட்டுரைகளும் பண்டைத் தமிழ் பண்பாடு பற்றி ஏழு தலைப்புகளிலான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல், ஆசிரியர் வருகைக்கு முற்பட்ட தமிழ் நாகரிகத்தையே கூறுவதாயினும், முதல் இரு கழக நூல்களும் அழிந்துபோன காரணத்தால், இலக்கியச் சான்றுகள் எல்லாம் பிற்கால நூல்களிலிருந்தே எடுத்துரைக்கப்படுகின்றன என்று, மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரே கூறிவிடுகிறார். நுண்ணிய ஆய்வுடன் எழுதப்பெற்றுள்ள இந்த நூலை வாசிக்கையில், சங்க இலக்கியங்கள் ஊடே நாமும் பாவாணருடன் ஒரு மனப்பயணம் நிகழ்த்திய உணர்வு தோன்றுகிறது. -கவுதம நீலாம்பரன்.
—-
நீங்கள் அறிய வேண்டிய வாழ்வியல்நெறிகள், கே.கே. கிருஷ்ணமூர்த்தி, விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை 641001, பக். 176, விலை 85ரூ.
இன்றைய வாழ்வுக்கு தேவையான பல நற்பண்புகளை, கோவை வேளாண்மைக் கல்லூரி முதல்வராக இருந்து, மேலான அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர் 20 தலைப்புகளில் இந்த நூலில் சிந்தனை விருந்து படைத்துள்ளார். தற்கால மாணவர்களிடத்தில் நற்பண்புகள் எதுவுமே இருப்பதாக தெரியவில்லை. ஆடம்பர வாழ்க்கை, கேளிக்கை, இன்பம், கர்வம், தற்பெருமை, அதிகபிரசங்கித்தனம், கீழ்ப்படியாமை, கெட்ட சகவாசம், அதிக சினிமா நாட்டம் ஆகியன அவர்களிடத்தில் பலவீனத்தை ஏற்படுத்திவிட்டன (பக். 11) நூலாசிரியரின் இந்த கவலை, நம்மையும் வருத்துகிறது. இதை மாற்றுவதற்கான பல வழிகளை, இவரே இந்த நூலில் காட்டியுள்ளார். தற்போதைய கல்வி முறையை மாற்றியாக வேண்டும் என்ற இவர் கருத்தை யாவரும் ஏற்பர். புதிய பல சிந்தனைகளை பேசும் ஆன்மிக வழிகாட்டி நூல். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 11/3/2012.