பயத்திலிருந்து விடுதலை
பயத்திலிருந்து விடுதலை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எஸ். ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 120ரூ.
தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி பயம் குறித்தும் அதனை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்தும் பல இடங்களில் பேசியதிலிருந்தும், எழுதியதிலிருந்தும் தொகுக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய நூல். நம் எல்லோருக்குமே பயம் உள்ளது. வேலை போய்விடுமோ என்ற பயம், பணம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், வெற்றி பெற மாட்டோமோ என்கிற பயம், நோய்கள் குறித்த பயம், மரணம் குறித்த பயம் இப்படிப் பலவகையான பயங்கள். ஆனால் உண்மையில் பயம் தோன்றுவதற்கான காரணம் நாம் ஒன்றை எதிர்கொள்ள விரும்பாததே. எனவேதான் தப்பித்தல், நியாயப்படுத்தல், கண்டனம் செய்தல், அடக்குதல் போன்ற ஏதோ ஒரு வழியில் பயத்தை எதிர்கொள்கிறோம். பயம் ஒருவரைப் பொய் சொல்ல வைக்கிறது. நேர்மையற்றவராக ஆக்குகிறது. குறுகிய நோக்குடையவராக ஆக்குகிறது. சிந்தனை வளமற்றவராக ஆக்குகிறது. எனக்குப் பயமில்லை என்று காட்டிக்கொள்ள, தான் விரும்பியவற்றைச் செய்வது அறிவுடைமை அல்ல. துணிச்சல் என்பது பயத்தின் எதிர்மறை அல்ல. பயம் என்கிற ஓர் உணர்ச்சியை முன் வைத்து இப்படிப் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறியிருக்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. பயம் என்றால் என்ன என்பதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கும் அதனை எதிர்கொள்வதற்கும் மனமுதிர்ச்சியைப் பெறவும் இந்நூல் நிச்சயம் உதவும். நன்றி: தினமணி,1/12/2014.
அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள், எஸ்.ஆர்விவேகானந்தம், கே.கே.முனியராஜ், அகதி வெளியீடு, திருவண்ணாமலை, விலை 60ரூ.
மனித நிலையில் இருந்து கொண்டே இறைநிலையை அடைந்தவர்கள் சித்தர்கள். அவர்கள் இந்த உலகிற்கும், மனித குலத்துக்கும் பல நன்மைகளைச் செய்துள்ளனர். இவர்களைப்போன்று அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 15 சித்தர்களின் வரலாறுகள் மற்றும் அபூர்வ புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 3/12/2014.