பரிசு பெறாத பாரதி பாடல்
பரிசு பெறாத பாரதி பாடல், செ. திவான், சுகைனா பதிப்பகம், 106, எப்/4ஏ, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627002, பக்கங்கள் 106, விலை 60ரூ-
செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. எனும் பாடல் தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிந்த பாடலாகும் என்றாலும், பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு பாடல் போட்டியில் இந்த பாடல் பரிசுபெறத் தவறிவிட்டது. பரிசுபெற தவறிவிட்ட பாரதியின் பாடல், எந்த சூழ்நிலையில் அந்த போட்டி நிகழ்ந்தது, அந்த போட்டியில் கலந்துகொண்டவர்கள் யார், யார், இது குறித்து பாரதி ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்துகளுக்கும் மேலாக ஆசிரியர்கள் ஆய்வில் பெற்ற சான்றுகளை விரிவாகவே இந்நூல் வாயிலாக தந்துள்ளேன் என்று ஆசிரியர் கூறியுள்ளார். பாரதி பற்றிய மற்றுமொரு ஆய்வு நூல். இந்தியக் கும்மி ஆ. மாதவையர் இயற்றியது. இரண்டாம் பதிப்பு சென்னை சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடத்தில் பிரசுரிக்கப்பட்டது. 1916ல் விலை அரை அணா என்று கடைசி பக்கம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
—–
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவ. ஞானம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, பக்கங்கள் 392, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-040-0.html
சிலம்பு செல்வரின் புகழ்பெற்ற நூல். ஏற்கனவே பல பதிப்புகளை கண்டது. வள்ளலார் இறையருள் பெற்ற ஞானி மட்டுமல்ல, சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதலை விரும்பியவர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்ளையின் அடிப்படையில் அவர் பாடிய சீர்திருத்தப்பாடல்கள் மக்களிடையே பரப்பப்படவில்லை. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்தியவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர். பசிப்பிணியை போக்க பல அறச்சாலைகள் நிறுவியவர். வள்ளலாரின் பிறப்பிலிருந்து அவர் ஜோதியில் கலந்தது வரையிலான அவரது தவ வாழ்க்கை, அவரது கருத்துக்கள், அவர் உருவாக்கிய மனிதநேயம் மிக்க அமைப்புகள் ஆகியவை பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் ஆசிரியர், இவ்வளவு சிறந்த ஆராய்ச்சி நூலை எழுத இவருக்கு எப்படி அவகாசம் கிடைத்தது எண்ணி வியப்புற்றேன்- என்று அண்ணாதுரை வியந்து பாராட்டிய நூல். அனைவருமே படித்து இன்புற வேண்டிய நூல். – மயிலை சிவா. நன்றி: தினமலர் 04 மார்ச் 2012.