பாசங்கள் பலவிதம்

பாசங்கள் பலவிதம், சூடாமணி சடகோபன், ருக்மணி பதிப்பகம், பக். 144, விலை 80ரூ.

பாசத்தை மையக்கருவாகக்கொண்டு, பலவிதமான பாசங்களை சிறுகதைகளாக வரைந்துகாட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆசாபாசங்களின் பின்னணியில் இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. அதனால் படிப்போருக்கு கதையின் நெருக்கதை உணரும்படி உள்ளது. மனதிற்குள் பல காலங்களாக காரணமின்றி புதைக்கப்பட்டு கிடக்கும் பாசத்தை, வெளியில் கொண்டு வராததால் அல்லது கொண்டுவரத் தெரியாததால், அவன் அடையும் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் யதார்த்த கண் கொண்டு பார்த்துள்ளார் ஆசிரியர். மகனிடம் அன்பு காட்டத்தவறிய சொக்கலிங்கம் முதல், நோய் உள்ளது என்று அறிந்ததும் ஜனனியைத் தன் மகனுக்கு மணம் பேசும் கார்த்தியின் தாய்ப் பாசம் வரை எல்லாமே நாம் அன்றாடம் காணும் பாசப் பறவைகளே. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 5/10/2015.  

—-

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடி, வலங்கைமான் நூர்தீன், ஓவியா பதிப்பகம், பக். 128, விலை 100ரூ.

பணக்காரர்களுக்கு பொழுதுபோக்காகவும் ஏழைகளுக்குப் போராட்டமாகவும் பெய்யும் மழை, பசியில் பிளாஸ்டிக் பழங்களை கொத்தித்தின்று செத்த காகம், தினம் தினம் பூத்துக் கொண்டேயிருக்கும் காதலி,அலைபேசிக் கோபுரங்கள் ஓவியக் குருவியைக் கொன்றுவிடுமோ என்று பயப்படும் குழந்தை, பாலத்திற்கு மேல் மணல் லாரிகளில் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் நதி என்று வாழ்க்கையின் பல பரிமாணங்களில் கவிமனம் தொட்டுச் செல்வதுடன் சமூகப் பிரக்ஞையுடன் பேசுவதால் திரும்பத் திரும்ப படிக்கவும் பேசவும் செய்யும் கவிதைகள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *