பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும்
பாரதத்தில் ராஜதர்மம் அன்றும், இன்றும், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், 33/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 456, விலை 250ரூ.
ஆட்சியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய உயரிய நெறிமுறைகளே ராஜதர்மம் எனப்படுவது. போற்றத்தக்க இத்தகைய நெறிமுறைகளை உருவாக்கி, அவற்றை உலகிற்கு முதன் முதலில் போதித்தது பாரத நாடு என்று கூறும் இந்நூலாசிரியர், அவை குறித்த பல்வேறு வரலாற்றுத் தகவல்களை இந்நூலில் தொகுத்துள்ளார். இதற்கு ராமாயணம், மகாபாரதம், சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் போன்ற ஹிந்து தர்ம நூல்கள் முதல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு போன்ற சங்க கால நூல்கள் வரை பல்வேறு நூல்களில் கூறப்பட்ட ராஜதர்ம நெறிகளையும், அவற்றையொட்டிய புராண மற்றும் சரித்திர கால மன்னர்களின் செயல்பாடுகளையும் எடுத்துக் கூறுகிறார். அத்துடன் இன்றைய மத்திய மாநில அரசுகளை ஆள்பவர்களின் செயல்பாடுகளையும், அந்தந்த இடங்களுக்கு ஏற்ப சுட்டிக்காட்டி, இன்றைய அரசியல் குறித்த விமர்சனங்களையும் இந்நூலில் எழுதியுள்ளார். இதன் மூலம் நம் பாரதத்தில் அன்று இருந்த ராஜதர்மத்திற்கும், இன்றுள்ள ராஜதர்மத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்நூலில் தெளிவாக அறிய முடிகிறது. -பரக்கத். நன்றி: துக்ளக், 27/12/2012.
—-
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தலங்கள், சாய்குமார், 16/28 2வது மெயின்ரோடு, ஜெய்நகர், அரும்பாக்கம், சென்னை 600108, விலை 110ரூ.
தமிழ்நாட்டில் உள்ள 243 விநாயக கோவில்களை பற்றிய வழிகாட்டி நூல். கோவில் இருக்கும் ஊர், அங்குள்ள விநாயகர் பெயர், கோவில் முகவரி, செல்லும் வழி, தலவரலாறு, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என்று தேவையான அனைத்து விளக்கங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/7/2013
—-
என்றென்றும் நன்றியுடன், நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-3.html
பிரபல டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் பற்றி அவருடைய துணை டைரக்டர் ஜே.டி.ஜீவா எழுதிய புத்தகம் இது. ரவிகுமாரின் சிறப்புக்களைப் பற்றி எழுதியிருப்பதுடன் பட உலகம் எப்படி செயல்படுகிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். சினிமா டைரக்டர்களின் பொறுப்புகள் என்ன, படம் தயாரிப்பது என்றால் அதில் எவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் இந்நூல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ரவிக்குமார் திட்டமிட்டு செயல்படுவதாலும், குறிப்பிட்ட காலத்தில் படத்தை முடிப்பதாலும் அவரால் நஷ்டம் அடைந்த பட அதிபர்கள் எவரும் இல்லை என்று கூறுகிறார் ஜீவா. படிப்பதற்கு சுவையான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/12/2012.