பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம்
பாரதநாடு பாருக்கெல்லாம் திலகம், ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், சென்னை, விலை 140ரூ.
நம் பாரத நாட்டின் அருமை, பெருமைகளைப் பற்றி, வி.ஹெச்.பி. நடத்தி வந்த ஹிந்து மித்திரன் இதழில் 2005ல் இந்நூலாசிரியர் எழுதிரய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதில் உள்ள விஷயங்கள் அடடா… இத்தனை சிறப்புகளைக் கொண்டதா நம் நாடு என்று இன்றைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத விஷயங்களே இல்லை. ஆனால் நம்மை ஆண்ட அன்னியர்கள் அவற்றையெல்லாம் அழித்துவிட்டார்கள் என்று ஆதங்கப்படும் ஆசிரியர், அவற்றை உரிய சான்றுகளுடன் இந்நூலில் தனித் தனிக் கட்டுரைகளில் விளக்கியுள்ளார். பீரங்கிப் படை என்ற 18ஆவது கட்டுரையில், முகலாயர் காலத்தில்தான் பீரங்கிப் படை நம் நாட்டில் அறிமுகமானது. அதற்கு முன் இதுபற்றி நமக்குத் தெரியாது என்று நினைத்திருந்தோம். ஆனால் புராதன காலத்திலேயே சுக்ரநீதியில், பீரங்கிப்படை எங்கே முன்னிறுத்தப்பட வேண்டும், பீரங்கிக் குண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் என்ன, அவற்றை எந்த விதத்தில், எப்படிக் கலந்து, எவ்வாறு பக்குவப்படுத்தித் தயாரிக்க வேண்டும் என்ற தொழில்நுட்பம் கூறப்பட்டுள்ளதை ஆசிரியர் விளக்குகிறார். மற்றொரு கட்டுரையில் ஐசக் நியூட்டனுக்கு 500 வருடங்களுக்கு முன்பே புவி ஈர்ப்பு விசையைப் பற்ற நம் நாட்டின் பாஸ்கராச்சாரியார் கண்டுபிடித்ததையும் விளக்குகிறார். இப்படி இந்நூலிலுள்ள 31 கட்டுரைகளில் பல துறைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளத சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 16/7/2014.
—-
உம்மத், ஸர்மிளா ஸெய்யித், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 350ரூ.
இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. 30 ஆண்டகளுக்கு மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதைதான் இந்த நாவல். மூன்று பெண்களின் துயர் இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும், கதை நிகழ்வுகளாக இந்த நூல் கொண்டிருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 9/7/2014.