பாரதமே உயிர்த்தெழு
பாரதமே உயிர்த்தெழு, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 205, விலை 55ரூ.
சுவாமி விவேகானந்தரின் பேச்சும், எழுத்தும் இளைஞர்களின் மனதில் ஆழப்பதிந்தால், இந்திய தேசம் வலிமையும், பெருமையும் பெரும் என்பதில் ஐயமில்லை. விவேகானந்தரின் சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் சுருக்கி ஆறு தலைப்புகளில் இந்நூல் விளக்குகிறது. கல்வியானது ஞானத்தை வெளிப்படுத்தி, மனிதனாக உருவாக்கி, தன்னம்பிக்கை, நற்பண்புகள், அறிவு, பண்பாடு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் கூற்றை இன்றைய கல்வியாளர்கள் சிந்தித்து பார்க்க, இந்நூல் பெரிதும் பயன்படும். அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
—-
குலக்கொடி, ம.ந. ராமசாமி, நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை 75, பக். 216, விலை 210ரூ.
இருபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். 25வது சிறுகதை குலக்கொடி. ஒரு சிறு வரலாறு என்னும் சிறுகதைக்கு கீழ், சிறுகதை அல்ல என்னும் குறிப்புடன் ஒரு சிறுகதை இடம் பெற்றுள்ளது. உண்மை நிகழ்வு என்பதை உணர்த்தும் வகையில் சிறுகதை அல்ல என்ற குறிப்பு அமைந்துள்ளது. கள்ளக் குரல் என்னும் சிறுகதையில் ஓர் அலுவலகத்திலிருந்து கள்ளத்தனமாய் ஒரு வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் இருவரின் குட்டு வெளிப்படுகிறது. அவர்களின் வேலையும் பறிபோகிறது. அந்த இருவரின் முகவரியையும் பாதிக்கப்பட்ட உறவினர் வந்து கேட்கும்போது முகவரியை கொடுக்காத அந்த நிர்வாகியின் நிர்வாகத் திறமை பளிச்சிடுகிறது. கதைகள் அனைத்தும் பத்திரிகைகளில் வெளியான கால வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. குலக்கொடியை படித்து முடித்ததும், 25 வகையான சூழலுக்குள் நுழைந்து வந்த எண்ணம் நம்மைச் சூழும். நன்றி : தினமலர், 4/12/2011.