பூக்கள் விடும் தூது
பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ.
இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா என்பது குறித்து உருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. கண்ணீர்த் துளிவர உள் உருகுதல் என்ற கலையில், வல்லவராக இருக்கிறார் ஸ்ரீஜா வெங்கடேஷ். பல பெண்களுக்கு, வாழ்க்கையே போராட்டமாக அமைந்துவிடுகிறது. ஆனால் அந்தப் போராட்டங்களையும், மன உளைச்சல்களையும் மீறி, பெண்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை, இந்த இரண்டு குறுநாவல்களும் பேசுகின்றன. கதாசுவாரசியமும், கருத்தாழமும் உள்ள கதைகள். -எஸ். குரு. நன்றி: தினமலர்,24/5/2015.
—-
இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 328, விலை 245ரூ.
விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள், நோன்பு ஆகியவை காலம் காலமாய் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருபவை. அவை நம் கலாசார, பண்பாட்டின் அடையாளங்கள். பொதுவாக, விழாக்கள் பண்டிகைகளின் போது மகிழ்ச்சி பொங்க உறவினர், நண்பர்களுடன் கூடி விருந்துண்டு, ஆடிப்பாடிக் களிக்கிறோம். நோன்பு, விரதம் ஆகியவற்றின்போது சிரத்தையுடன் நீராடி, அவரவர் மதச் சின்னங்களை அணிந்து உபவாசமிருக்கிறோம். வடக்கே ஜம்மு-காஷ்மீரிலிருந்து, தெற்கே தமிழகம் வரை, வடக்கு தெற்காக, கிழக்கு மேற்காக எத்தனையோ மாநிலங்கள், அவற்றில் பல மதங்கள், ஜாதிகள், மொழிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்டிகைகள், விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பின்னணியில் ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணக் கதையோ, வரலாற்று நிகழ்வோ அல்லது ஏதோ ஒரு தத்துவமோ நிச்சயம் இருக்கும். நூலாசிரியர் அவை அத்தனையையும் இந்த ஒரே நூலில் திரட்டித் தந்திருக்கிறார். அத்துடன் அந்தந்த பிரதேசங்களுக்கு செல்ல நேர்ந்தால், அங்கு தங்கக்கூடிய இடங்கள் பற்றிய குறிப்புகளையும் தந்திருக்கிறார். பாராட்டத்தக்க முயற்சி. -மயிலை சிவா. நன்றி: தினமலர்,24/5/2015.